சொந்த கட்சி நிர்வாகியை ஆள் வைத்து அடித்த த.வெ.க., பிரமுகர்!
பி ல்டர் காபியை ருசித்தபடியே, “அதிகாரிகளை மிரட்டறா ஓய்...” என, விவாதத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா.
“யாருங்க அது...” என கேட்டார் அந்தோணிசாமி.
“துாத்துக்குடி த.வெ.க., - எம்.எல்.ஏ.,வான ஸ்ரீநாத், மீன்வளத் துறை அமைச்சராகவும், ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ., மதன்ராஜா, சிறு, குறு தொழில் துறை அமைச்சராகவும் இருக்கால்லியோ... ஸ்ரீநாத்தின் முழு தொகுதியும், மதன்ராஜா தொகுதியில் பாதியும், துாத்துக்குடி மாநகராட்சிக்குள்ள வர்றது ஓய்...
“துாத்துக்குடி மேயரா, தி.மு.க.,வைச் சேர்ந்த ஜெகன் பெரியசாமி இருக்கார்... இந்த சூழல்ல கான்ட்ராக்டர்கள் சிலர், த.வெ.க., அமைச்சர்கள் பெயரை சொல்லி, 'டெண்டர்களை எங்களுக்கு தான் ஒதுக்கணும்'னு, மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டறா ஓய்...
“இது சம்பந்தமா, மாநகராட்சி கூட்டத்துலயே மேயர் ஜெகன் பகிரங்கமா குற்றஞ்சாட்டினாரு... இப்ப, அதிகாரிகளை மிரட்டிய கான்ட்ராக்டர்கள் யார் யார்னு, உளவுத்துறை போலீசார் பட்டியல் எடுத்துண்டு இருக்கா ஓய்...” என்றார் குப்பண்ணா.
“நியூட்டன், பினோ, சிபி, தினேஷ் எல்லாம் ஒண்ணா எங்க வே போறாவ...” என, தெருவை பார்த்து முணுமுணுத்த பெரியசாமி அண்ணாச்சியே, “பதவி கிடைக்காதவங்களை ஆளுங்கட்சிக்கு கூப்பிடுதாரு வே...” என்றார்.
“யாருப்பா அது...” என கேட்டார் அன்வர்பாய்.
“காங்கிரஸ் கட்சியின் தமிழக பொதுச்செயலராகவும், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் ஆதரவாளராகவும் இருந்த சுந்தர்ராஜன், சட்டசபை தேர்தல்ல சிவகங்கை தொகுதியில், 'சீட்' கேட்டும் கிடைக்கல... சிதம்பரம் தனக்கு சிபாரிசு பண்ணாத கோபத்துல இருந்த சுந்தர்ராஜன், சமீபத்துல த.வெ.க.,வுல சேர்ந்துட்டாரு வே...
“அதோட, சிவகங்கை மாவட்டம் முழுக்க, கட்சியில பதவி கிடைக்காம ஓரங்கட்டி வைக்கப்பட்டிருக்கும் காங்கிரசாரை, த.வெ.க., பக்கம் தள்ளிட்டு போகும் திட்டத்துலயும் இறங்கிட்டாரு...
''மாவட்டத்துல சிதம்பரம் குடும்பத்தின் ஆதிக்கத்தால, கட்சியில் வளர முடியாம தவிக்கிறவங்களையும், மற்ற கட்சி உறுப்பினர்களையும், த.வெ.க.,வில் சேர்க்க பேச்சு நடத்திட்டு இருக்காரு வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
“உட்கட்சி பூசல் சம்பந்தமா என்கிட்டயும் ஒரு தகவல் இருக்குது பா...” என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
“சென்னை விருகம்பாக்கம் தொகுதி, த.வெ.க., முக்கிய புள்ளி, அரசு பதவியிலும் இருக்காரு... இவர், தி.மு.க., - அ.ம.மு.க., - தே.மு.தி.க.,வில் இருந்து புதுசா கட்சிக்கு வந்தவங்களுக்கு தர்ற முக்கியத்துவத்தை, விஜய் மக்கள் இயக்கத்தில் பாடுபட்ட பழைய நிர்வாகிகளுக்கு தர மாட்டேங்கிறாரு பா...
“சமீபத்துல, 138வது வார்டு த.வெ.க., இணைச் செயலர் முத்துகுமாரை சிலர் தாக்கிட்டாங்க... முக்கிய புள்ளி துாண்டுதல்ல, மாற்றுக் கட்சியில இருந்து வந்த சிலர் தான், முத்துகுமாரை தாக்கியதா த.வெ.க.,வினர் சொல்றாங்க பா...
“இது சம்பந்தமா, எம்.ஜி.ஆர்., நகர் போலீஸ் ஸ்டேஷன்ல முத்து குமார் குடுத்த புகார்ல, 'வட்டச் செயலர் பதவியில இருந்து நான் விலகணும்... குறிப்பிட்ட சிலரது பேச்சை கேட்டு நடக்கணும்'னு சொல்லியே அடிச்சதா குறிப்பிட்டிருக்காரு...
“அவர் தாக்கப்படும், 'வீடியோ' காட்சிகள் சமூக வலைதளங்கள்ல பரவியும், முக்கிய புள்ளியின் அழுத்தத்தால, புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காம, சமரச முயற்சியில இறங்கியிருக்காங்க பா...” என முடித்தார் அன்வர்பாய்.
“சபரிநாதன், நாளைக்கு பார்க்கலாம் ஓய்...” என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
மேலும்
-
கார் விபத்தில் இருவர் பலி
-
இரும்பு உருக்கு தொழிற்சாலைக்குள் புகுந்து காப்பர் பிளேட் திருட முயன்ற 4 பேர் கைது
-
எச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை ரத்து
-
கோயிலுக்குள் போன் கொண்டு செல்ல தடைக்கு வரவேற்பு!
-
மாநில அளவில் குத்துச்சண்டை போட்டி: 3,000 வீரர், வீராங்கனையர் பங்கேற்பு
-
எல்.ஐ.சி., ஆண்டு விழா