இதே நாளில் அன்று

செப்டம்பர் 2: டில்லியில், விஜய் சர்மா - கிரிஷா சர்மா தம்பதியின் மகனாக, 1988ல் இதே நாளில் பிறந்தவர், இஷாந்த் விஜய் சர்மா.

டில்லியில் உள்ள கங்கா சர்வதேச பள்ளியில், 10ம் வகுப்பு வரை படித்த இவர், கிரிக்கெட்டில் முழுநேர பயிற்சி எடுப்பதற்காக பள்ளிப் படிப்பை கைவிட்டார். பயிற்சியாளர் ஷர்வண் குமார், டில்லி உள்ளூர் அணிகளுடனான போட்டிகளில் விளையாடுமாறு, இவரை ஊக்கப்படுத்தினார்.

அப்போது, வலது கை அதிவேக பந்து வீச்சில் தனித்திறன் பெற்றார். தொடர்ந்து, டில்லி ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடினார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியில், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இடம்பெற்றார். 2008ல், ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் நடந்த போட்டியில், மணிக்கு 152.6 கி.மீ., வேகத்தில் பந்து வீசி புகழ் பெற்றார்.

பெர்த், சிட்னி நகரங்களில் நடந்த போட்டிகளில், ஆஸ்திரேலிய அணி கேப்டன் ரிக்கி பாண்டிங்கை, தன் வேகப்பந்து வீச்சால் ஆட்டமிழக்கச் செய்தார்.

ஐ.பி.எல்.,லில், 'கொல்கட்டா நைட் ரைடர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டில்லி கேபிட்டல்ஸ்' அணிகளில் விளையாடினார்.

தற்போது, 'குஜராத் டைட்டன்ஸ்' அணியில் இடம்பெற்றுள்ள இவருக்கு, இன்று 38வது பிறந்த தினம்!

Advertisement