மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவிவசாயிகள் எதிர்ப்பு: வனவிலங்குகளுக்கும் ஆபத்து என புகார்

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் செல்லும் வழியில் மலையோரத்தில் மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கூடலூர் வடக்கு தோட்டப் பகுதியில், மலையோரத்தில், 7.35 கோடி ரூபாய் செலவில், அம்ரூத் 2.0 திட்டத்தில் மலக்கழிவு மற்றும் சாக்கடை மேலாண்மை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 18 மாதங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைய உள்ள இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தால், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என, இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கூடலூர் வடக்கு தோட்ட பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில்,' தற்போது அமைக்க திட்டமிடப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே, 20க்கும் மேற்பட்ட தோட்ட விவசாய குடும்பங்கள் உள்ளன. இங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, கொசுவினால் பரவும் நோய்கள் மற்றும் சுகாதாரமற்ற நிலை உருவாகும்.

இவை எல்லாவற்றையும் விட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள பகுதியில், 3 மழை நீர் தடுப்பணைகள் உள்ளன. பருவ மழை காலங்களில் இங்கு சேகரிக்கப்படும் நீர் அசுத்தமடையும் அபாயம் உள்ளது. மலக்கழிவு மற்றும் சாக்கடை மேலாண்மை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து ஏற்படும் எந்த ஒரு கசிவு, வழிதல் மற்றும் நிலத்தடி ஊடுருவல், உள்ளூர் நிலத்தடி நீரை நிரந்தரமாக மாசுபடுத்தும். இதனால் உள்ளூர் விவசாயிகள் மற்றும் கால்நடைகளின் முதன்மையான குடிநீர் கடுமையாக பாதிக்கும். வடகிழக்கு பருவ மழையின் போது அதிகப்படியான நீர் சேமிக்கப்படும் இந்த தடுப்பணைகளில் வனவிலங்குகளுக்கு, குறிப்பாக, யானை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு நிரந்தர நீர் ஆதாரமாகவும், விவசாயக் கிணற்றின் நீரின் அளவை அதிகப்படுத்தவும் உதவுகிறது.

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதால், தடுப்பணைக்கான நீர் வழிப்பாதை அடைபடும். இதனால் பருவ மழை காலங்களில் ஏற்படும் வெள்ளம் தடம் மாறி சேதம் ஏற்படுத்த வாய்ப்பு ஏற்படும். சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வரும் துர்நாற்றம் காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளையும், கால்நடைகளையும் ஈர்க்கும் அபாயம் உள்ளது. மேலும், சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து ஏற்படும் இரைச்சல் அருகில் வசிக்கும் விவசாயிகளுக்கும், நாய், ஆடு, மாடு, கோழி போன்ற வேளாண் விலங்குகளுக்கும் மிகுந்த துன்பத்தை தொடர்ச்சியாக தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், கால்நடைகளின் நலனையும் மற்றும் மான், யானை, காட்டுப்பன்றி, மயில் போன்ற வனவிலங்குகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இவ்விடத்தில் செயல்படுத்தும் திட்டத்தை கூடலூர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும். இத்திட்டத்தை பாதுகாப்பான வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.

Advertisement