5 நாட்களாக நடக்கும் மீட்புப்பணி: மாயமான 3,000 பேர் கதி என்ன?

காத்மாண்டு: நேபாளம் மற்றும் திபெத் எல்லை பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால், சகதி மற்றும் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் நடவடிக்கைகள் ஐந்தாவது நாளாக நேற்றும் தொடர்ந்தன.

உயிரிழப்பு அதிகரித்துள்ள நிலையில், மாயமான, 3,000க்கும் மேற்பட்டோரின் கதி என்ன என்பது பெரும் பதற் றத்தை ஏற்படுத்தியுள்ளது .

நம் அண்டை நாடான நேபாளம் மற்றும் திபெத்தின் எல்லை பகுதியில் ஏற்பட்ட இயற்கை பேரிடரில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று, 788 ஆக உயர்ந்தது.

வெளிநாட்டினர் 320 பேர் உட்பட மொத்தம் 3,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதில், 275க்கும் மேற்பட்ட இந்தியர்களும், 128 இந்திய வம்சாவளியினரும் அடங்குவர்.

அதே சமயம், 108 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ளம் பாதித்த மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த, 238 மாணவர்கள் மற்றும், 18 ஆசிரியர்கள் காணாமல் போயுள்ளதாக நேபாள கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.


திபெத்தில், 546 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும், மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும் அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மீட்பு பணியின் போது போட்டே கோஷி ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்ததால், மீண்டும் வெள்ள அபாயம் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மீட்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டு உள்ளனர். மேலும், வெள்ளம் பாதித்த பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என, நேபாள வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.



@block_B@ பேரிடர் உதவியில் இந்தியா! வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு நான்கு கட்டங்களாக மொத்தம், 68.5 டன் நிவாரணப் பொருட்கள் வழங்கியுள்ளதுடன், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக தொழில்நுட்ப குழுக்கள், தடயவியல் நிபுணர்கள் குழு மற்றும் உபகரணங்களும் இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட போக்குவரத்து சாலைகளை இணைப்பதற்காக, 230 அடி நீளமுள்ள ஒற்றை வழி மாடுலர் உருக்கு பாலம் மற்றும் அதற்கான உபகரணங்களை ஏற்றிச் செல்லும் 16 லாரிகள் நேபாளத்தை அடைந்துள்ளன. மேலும், பல பெய்லி பாலங்களை அமைப்பதற்கான உபகரணங்களுடன் தொழில்நுட்ப குழுவினரும் அனுப்பப்பட உள்ளனர்.block_B

Advertisement