'ட்ரீம்' திருப்பூர்! ஜென்ஸி காட்டும் வழி
- நமது நிருபர் குழு-
திருப்பூர் என்றாலே தொழில், வேலைவாய்ப்பு, பரபரப்பு. ஆயிரக்கணக்கானோருக்கு வாழ்வாதாரம் தரும் நகரமாக வளர்ந்துள்ளபோதும், அடுத்த தலைமுறையின் பார்வையில் இன்னொரு மாற்றத்தையும் எதிர்பார்க்கிறது.
'வேலை கிடைக்கும் நகரம்' என்பதோடு நின்றுவிடாமல், 'வாழ்க்கை பிடிக்கும் நகரமாகவும்' திருப்பூர் மாற வேண்டும் என்பதே ஜென்ஸி கிட்ஸ்களின் கனவு.
சுத்தமான காற்று, பாதுகாப்பான குடிநீர், நிழல் தரும் மரங்கள், நடைபாதைகள், சைக்கிள் தடங்கள், குழந்தைகளுக்கான பூங்காக்கள், இளைஞர்கள் கூடும் பொது இடங்கள் என, மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் வசதிகள் நகரின் அடிப்படை தேவைகளாக மாற வேண்டும்.
பெரிய கட்டடங்களும் அகலமான சாலைகளும் பெருகுவது மட்டுமே நகர வளர்ச்சியல்ல. அவற்றுக்கு நடுவே மனிதர்களுக்கான பாதுகாப்பான, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கையும் உருவாக வேண்டும்.
அந்த மாற்றத்தை நோக்கியதே ஜென்ஸி கிட்ஸ்களின் 'ட்ரீம் சிட்டி' கனவு.
---
'வாழும் நகரம்'
தனுஷ், சிவில் இன்ஜினியர்:
அடுத்த தலைமுறைக்கு தொழிற்சாலைகள், கட்டடங்கள், சாலைகளை மட்டும் விட்டுச் செல்வது முழுமையான வளர்ச்சியாகாது. சுத்தமான காற்று, பாதுகாப்பான குடிநீர், நிழல் தரும் மரங்கள், நடைபாதைகள், சைக்கிள் பயிற்சிக்கான பாதுகாப்பான பாதைகள், சிறுவர் பூங்காக்கள், இளைஞர்கள் கூடும் பொது இடங்கள் என, சுற்றுச்சூழலோடு இயைந்த வாழ்க்கைச் சூழலையும் உருவாக்க வேண்டும்.
திருப்பூர் வெறுமனே வேலைக்காக மக்கள் குவியும் நகரமாக இல்லாமல், நல்ல வாழ்க்கைக்காக அனைவரும் தங்க விரும்பும் நகரமாக மாற வேண்டும்.
'இங்கே நல்ல வேலை கிடைக்கும்' என்பதைத் தாண்டி, 'இங்கே சிறந்த வாழ்க்கையும் அமையும்' என்று பெருமையுடன் சொல்லக்கூடிய திருப்பூரை உருவாக்குவது இளைய தலைமுறையின் பொறுப்பு.
---
'கட்டடம் மட்டும்'
சுவாதி, முதுநிலை பட்டதாரி:
திருப்பூர் வேலைவாய்ப்பையும் பொருளாதாரத்தையும் வழங்கும் நகரமாக இருந்தாலும், முழுமையான வாழ்க்கைக்கு பொருளாதாரம் மட்டும் போதுமானதல்ல.
சுத்தமான காற்று, குடிநீர், நிழல்தரும் மரங்கள், பாதுகாப்பான நடைபாதைகள், சைக்கிள் தடங்கள் அவசியம். குழந்தைகள், முதியோர், இளைஞர்களுக்குப் பாதுகாப்பான பூங்காக்களும், குறைந்த செலவிலான வார இறுதி பொழுதுபோக்கு தளங்களும் உருவாக்கப்பட வேண்டும்.
பெரிய கட்டடங்களும் சாலைகளும் மட்டுமே வளர்ச்சியல்ல; மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதே உண்மையான வளர்ச்சி.
இரவில் பெண்கள் அச்சமின்றி நடமாடவும், குழந்தைகள், முதியவர்களுக்கு பாதுகாப்பான சூழல் கிடைக்கவும் வேண்டும். அரசு, தொழில் நிறுவனங்கள், இளைஞர்கள், பொதுமக்கள் இணைந்து செயல்பட்டால்தான் திருப்பூர் மகிழ்ச்சியான வாழ்விடமாக மாறும்.
--
'சுத்தம் முதலில்'
அஜய், இளம் தொழில்முனைவர்:
திருப்பூரில் துாய்மைக் கலாசாரத்தையும் மாசற்ற சுற்றுச்சூழலையும் உருவாக்குவது காலத்தின் கட்டாயம்.
குப்பைகளை முறையாக அகற்றுவது, பல்லுயிர் பாதுகாப்பு போன்ற சமூகப் பொறுப்புணர்வை பள்ளிப் பருவத்திலிருந்தே வளர்க்க வேண்டும். அதேபோல், தரமான சாலைகள், பாதுகாப்பான நடைபாதைகள், மிதிவண்டிகளுக்கான பிரத்யேக பாதைகள், பசுமைப் பூங்காக்கள் என நகரின் உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்த வேண்டும்.
---
'மாடல் வார்டு'
சஞ்சிதா மிர்திகா, முதுகலை பட்டதாரி:
நாடி வந்தோரை வாழவைக்கும் திருப்பூர், வெறும் தொழில் நகரமாக இல்லாமல், மக்கள் வாழத் தகுதியான நகரமாக மாற அரசு போதிய நிதி ஒதுக்க வேண்டும். பொழுதுபோக்கு, சமூகத் தேவைகளுக்காக கோவை, ஈரோடு போன்ற நகரங்களைச் சார்ந்திருக்கும் நிலை மாற வேண்டும். தொழிலாளர்களுக்கு குடியிருப்பு, தடையற்ற போக்குவரத்து வசதிகள் அவசியம்.
சிறந்த கட்டமைப்பு, சுகாதாரம் கொண்ட வார்டுகளைத் தேர்வு செய்து 'முன்மாதிரி வார்டுகள்' என அறிவிக்கலாம். சமூக மன்றங்கள், குழந்தைகளின் திறனை வளர்க்கும் அமைப்புகள், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வசதிகளை மேம்படுத்த வேண்டும். மாரத்தான் உள்ளிட்ட ஆரோக்கியமான நிகழ்வுகளையும் தொடர்ந்து நடத்த வேண்டும்.
----
'வேலைக்காக வந்தோம்; வாழ்க்கைக்காகவும் இங்கேயே இருக்க வேண்டும்' என்று அடுத்த தலைமுறை சொல்லும் நகரமாக திருப்பூர் மாறுவதுதான் ஜென்ஸி கிட்ஸ்களின் கனவு.
@block_B@ கனவு நனவாகும்
ஜெயபாலன், மாநிலப் பொருளாளர், இந்திய கட்டுனர் சங்கம்: திருப்பூரின் மிகப்பெரிய பலம் அதன் தொழில் மற்றும் தொழில்முனைவோர் கலாசாரம். நகர்ப்புற மேம்பாட்டை அரசிடம் மட்டும் எதிர்பார்க்காமல், அரசு, உள்ளாட்சி, தொழில்துறையினர், கட்டுமான வல்லுநர்கள், பொறியாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். தொழில் வளர்ச்சி, சுற்றுச்சூழல், சீரான போக்குவரத்து, பொது இடங்கள், மேம்பட்ட சமூக வாழ்க்கை என ஐந்து அம்சங்களையும் ஒரே நகரத் திட்டத்தில் இணைக்க முடியும். நமது இலக்கு வெறும் புதிய கட்டடங்களை எழுப்புவது அல்ல; திருப்பூருக்கான புதிய நகர வாழ்க்கையை உருவாக்குவதே. அந்த மாற்றத்துக்கான சாத்தியங்கள் திருப்பூரில் நிறைய இருக்கின்றன. வேலை தரும் நகரம் என்பதில் திருப்பூரின் வெற்றி ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுவிட்டது. இனி, அந்த வேலைவாய்ப்பைத் தாண்டி மக்களுக்கு தரமான வாழ்க்கையையும் கொடுக்கும் நகரமாக திருப்பூர் உருவாக வேண்டும். ----block_B
மேலும்
-
மேட்டூர் அணையை முதல்வர் நாளை திறக்கிறார்; இன்று நீர்வரத்து 10,485 கனஅடியாக அதிகரிப்பு
-
திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
-
மிஸ் டீன் இன்டர்நேஷனல் பட்டத்தை வென்றார் கியூபாவின் ஜோனா உரங்கா!
-
கிரைம் கார்னர்
-
குறைந்த விலைக்கு மொபைல் தருவதாக விளம்பரம் செய்து மோசடி: 2 பேருக்கு 'காப்பு'
-
தண்ணீர் பக்கெட்டில் விழுந்து குழந்தை பலி