லஞ்சத்தை ஒழிக்க பின்பற்ற வேண்டிய நடைமுறை: வேகமாக பரவும் கன்னியாகுமரி கலெக்டர் உத்தரவு

5

கன்னியாகுமாி: சமீபத்தில், அரசு ஊழியர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவு:

அனைத்து பணப் பரிவர்த்தனைகளையும், 'டிஜிட்டல்' முறையில் செலுத்த முடியும் என்கிறபோது, தற்போதைய சூழலில், அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு, தங்கள் சொந்த பயன்பாட்டிற்காக கொண்டு வரும் பணத்திற்கு, குறிப்பிட்ட வரம்பை நிர்ணயிக்க வேண்டும்.

இவ்வாறு நிபந்தனை விதிக்கப்பட்டால், அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை கட்டுப்படுத்த உதவும். ஊழலற்ற நிர்வாகம் அமைய வேண்டுமெனில், இது போன்ற வழிகாட்டுதல்கள் உருவாக வேண்டும். இது குறித்து அரசு தரப்பில் செப்., 3ல் தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

இந்தச் சூழ்நிலையில், கன்னியா குமரி கலெக்டர் பிரதாப் கடந்த மாதம் வெளியிட்ட சுற்றறிக்கை, வேகமாக பரவி வருகிறது. அந்த சுற்றறிக்கையை, மாநிலம் முழுதும் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

அலுவலக நடைமுறையின்படி, அரசு துறைகள் மற்றும் பிற அரசு நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தங்கள் கையிருப்பில் உள்ள ரொக்கப் பணம் விபரத்தை, அதற்கான பதிவேட்டில் பதிவு செய்து, அலுவலக தலைவரின் கையெழுத்து பெற வேண்டும். அனைத்து வேலை நாட்களிலும், இதை பராமரிக்க வேண்டும்.

ஆனால், பெரும்பாலான அலுவலகங்களில், இப்பதிவேடு தொடர் பராமரிப்பில் இல்லை. இப்பதிவேட்டை பராமரிக்க, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன. அதை நடைமுறைப்படுத்த வேண்டும்

அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணிபுரிவோர், ஒவ்வொரு நாளும் தங்கள் கையிருப்பில் உள்ள ரொக்கப்பணத்தை பதிவு செய்ய, பிரத்யேகமான பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்

இது வருகை பதிவேட்டுடன், அலுவலக தலைவர் ஒப்புதல் பெற்று, சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளரால் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட வேண்டும்

இப்பதிவேட்டை மேல் அதிகாரிகள், மாதம் இரு முறை ஆய்வு செய்ய வேண்டும்

அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும், தேவைக்கு அதிகமான ரொக்கத்தை கையிருப்பாக வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். இப்பதிவேட்டை பராமரிக்காத அலுவலகத்தில், அதன் தலைவர், கண்காணிப்பாளர், வருகை பதிவேட்டை பராமரிக்கும் பணியாளர் ஆகியோர் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement