எல்லாம் ஒரு விளம்பரந்தான்! விளம்பர நிறுவன நிதியில் பஸ் ஸ்டாப் : மாநகராட்சி முயற்சிக்கு 'புல்ஸ்டாப்'

கோவை,:நெடுஞ்சாலைத்துறை நிதி வழங்கியும், தனியார்விளம்பர நிறுவனங்கள் வழங்கிய நிதியால் அவிநாசி ரோட்டில் பஸ் ஸ்டாப் அமைத்து, சிக்கலில் மாட்டியுள்ளது மாநகராட்சி.


அவிநாசி ரோடு மேம்பால பணிக்காக, இருபுறம் பஸ் ஸ்டாப்களில் இருந்த நிழற்குடைகள் அகற்றப்பட்டன. பாலம் திறக்கப்பட்ட நிலையில், 32 நிழற்குடை அமைப்பதற்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் மாநகராட்சி நிர்வாகத்துக்கு ரூ.2.64 கோடி வழங்கப்பட்டது.

அந்த நிதியை பயன்படுத்தாமல், தனியார் நிறுவனங்கள் மூலம் விளம்பர அடிப்படையில் நிழற்குடை அமைத்தது மாநகராட்சி. இதன் வாயிலாக தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டதாக புகார் எழுந்தது.

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் சென்றதால், வேறு வழியின்றி நெடுஞ்சாலைத்துறை வழங்கிய நிதி மூலம் நிழற்குடை அமைப்பதற்கான பணியை மாநகராட்சி துவங்கியுள்ளது.

கன்ஸ்யூமர் காஸ் அமைப்பு செயலர் கதிர்மதியோன் கூறுகையில், நெடுஞ்சாலையில் விளம்பரத்துடன் நிழற்குடை வைப்பதற்கு மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறைகள் தடை விதித்துள்ளன.

கோர்ட் உத்தரவின்படி நிழற்குடையில் விளம்பரம் இருக்கக் கூடாது என்பதற்காக தான், நெடுஞ்சாலைத்துறையே மாநகராட்சிக்கு நிதி கொடுத்தது. சாலை பாதுகாப்பு விதிகள், கோர்ட் உத்தரவு எதையும் கண்டுகொள்ளாமல் மாநகராட்சி வருவாய் ஈட்டுவதில் மட்டும் கவனம் செலுத்துகிறது.

பஸ் ஸ்டாப்களில் விளம்பரம் வைப்பது தொடர்பாக, 2016ல் மாநகராட்சி கமிஷனர் மீது, கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தலைமை செயலரிடம் புகாரளித்தார். அதன் பிறகும் மாறவில்லை.

தி.மு.க.ஆட்சியில் மாநகராட்சி அதிகாரிகள் செய்த தவறை, இப்போதைய கமிஷனர் தொடரக்கூடாது.

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரிடம் புகாரளித்ததால், அந்த நிதி மூலம் நிழற்குடை அமைக்க முடியுமா என ஆய்வு செய்கிறார்கள்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, விளம்பரத்துடன் வைத்த நிழற்குடையை அகற்றிவிட்டு, புதிய நிழற்குடை அமைக்க வேண்டும் என்றார்.

மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா, தலைமை பொறியாளர் விஜயகுமார் ஆகியோரிடம் விளக்கம் கேட்க முயற்சித்தோம். அவர்கள் பதிலளிக்கவில்லை.

எங்களிடம் கேட்கவில்லை

நெடுஞ்சாலைத்துறை புகார்

'விளம்பரத்துடன் நிழற்குடை அமைக்கக்கூடாது. நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து ஆய்வு செய்து தான் நிழற்குடை அமைக்க வேண்டும். 'நாங்கள் கொடுத்த நிதியை எப்படி பயன்படுத்தியுள்ளீர்கள். பணி எப்போது துவங்கியது; எப்போது முடிந்தது என ரிப்போர்ட் கொடுக்க வேண்டும். செலவழித்த தொகை போக மீதியிருந்தால் திருப்பியனுப்ப வேண்டும்' என்று மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் அனுப்பினோம். எந்த பதிலும் இல்லை. இப்போதும் எங்களுடன் ஆலோசிக்காமல்தான் நிழற்குடை அமைக்கிறார்கள்' என்கின்றனர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்.

Advertisement