இருண்டு போயிருந்த...முதியோரின் வாழ்வில் ஒளி!
இ ருள் சூழ்ந்த சாலையில் நடப்பதே கடினம். இருள் சூழ்ந்த வாழ்க்கையில் பயணிப்பதை கேட்கவா வேண்டும்.
ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ஆதரவற்றோர் தங்கும் மையத்தில் 100 பேர் உள்ளனர். அவர்களில் 12 பேர் பார்வை பாதிக்கப்பட்டவர்கள். 3 பேர் முற்றிலும் பார்வை இழந்தவர்கள்.
குடும்பத்தினரால் கைவிடப்பட்ட இவர்களுக்கு நல் உள்ளங்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, இருள் சூழ்ந்த வாழ்க்கையில் நம்பிக்கை ஒளி பிறந்துள்ளது.
தங்கதுரை என்பவர், சொந்த ஊர் மதுரை திருமங்கலம். கோயம்புத்தூர் வந்து 30 வருஷத்துக்கு மேலாச்சு. கேட்டரிங் நிறுவனத்துல வேலை பார்த்தேன். காய் வெட்டுவேன், தோசை ஊத்துவேன், சப்ளை பண்ணுவேன். நைட் தூங்காம கண் முழிச்சு வேலை பார்ப்பேன்.
கல்யாணம் ஆகலை. மாசம் 50 ஆயிரத்துல இருந்து 70 ஆயிரம் ரூபா வரை சம்பாதிச்சேன். உடம்பை பார்க்காம விட்டுட்டேன். 2024 ஜனவரில பார்வை போயிடுச்சு. சம்பாதிச்ச காசை ஊர்ல அண்ணன் பசங்க கிட்ட கொடுத்து வச்சிருந்தேன். அவங்க ஏமாத்திட்டாங்க.
ரயில்வே ஸ்டேஷன் கிட்ட பிச்சை எடுத்தேன். வர்ற காசுல போலீஸ் கேன்டீன்ல சாப்பிடுவேன். பார்வை போய் 10 மாசம் கழிச்சு இங்க கூப்ட்டு வந்தாங்க.
போன மாசம் கண்ணுல ஆபரேஷன் பண்ணின பெறகு பார்வை கிடைச்சுருச்சு. உடம்புக்கே தெம்பு வந்த மாதிரி இருக்கு. மறுபடியும் காய்கறி வெட்டுற வேலைக்கு போலாம்னு முடிவு செஞ்சிருக்கேன் என்கிறார் புதிய உற்சாகத்துடன்.
சூலூரை சேர்ந்த ஆறுமுகத்தின் கதை இன்னும் கொடுமை. திருமணமாகி மனைவி, மகன் உள்ளனர். பார்வை பாதிக்கப்பட்டவுடன் குடும்பம் அவரை கைவிட்டுவிட்டது.
நான் சாதாரண கூலி தொழிலாளி. கொரோனா காலத்துல பார்வை பறிபோச்சு. ஜி.எச். கிட்ட படுத்து கிடந்தவனை இங்க கூப்பிட்டு வந்தாங்க. ஆபரேஷன் பண்ணினதுல வலது கண்ல பார்வை வந்துருச்சு. இடது கண்ணுக்கு ஆபரேஷன் செய்ய போறாங்க. அது முடிஞ்சதும் பஸ் ஏறி சூலூர் போக போறேன் என்கிறார் ஆறுமுகம்.
8 ஆண்டுக்கு பிறகு பார்வை பெற்றுள்ள சந்திரன், அப்பா மிலிட்டரில வேலை பார்த்து ரிட்டயர் ஆனவர். நான் டி.காம் படிச்சுட்டு சென்னையில ஒரு ப்ரைவெட் கம்பெனில கிளர்க்கா வேல பார்த்தேன். கல்யாணமாகி ஒரு மகள், மகன் இருக்காங்க. மகளுக்கு கல்யாணம் செஞ்சு வச்சேன். கண் புரைக்கு உடனே டிரீட்மென்ட் எடுக்கலை.
2018ல ரெண்டு கண்ணுலயும் பார்வை பறிபோச்சு. வீட்டுக்காரம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு முடியலை. ஆஸ்பத்திரில சரி செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாங்க. ரிலேட்டிவ்ஸ்க்கு பாரமா இருக்க பிடிக்கலை.
இங்க ஏதாவது ஆர்பனேஜ்ல தங்கிக்கலாம்னு வந்தேன். ரயில்வே ஸ்டேஷன்ல கேட்டப்ப, இங்க சேர்த்து விட்டாங்க. வலது கண்ணுல பார்வை கிடைச்சுருச்சு. இடது கண்ணுல எதுவும் செய்ய முடியாது'னு சொல்லிட்டாங்க. ஒரு கண் பார்வையே எனக்கு 10 வயசு குறைஞ்ச பீலிங் குடுத்துருக்கு.
ஆபரேஷன் ஆன விஷயம் சொந்தக்காரங்களுக்கு தெரியாது. திரும்பி போய் அவங்களுக்கு சர்ப்ரைஸ் குடுக்கலாம்னு இருக்கேன்.
கடவுள் எப்பவும் நல்ல மனசு உள்ள மனுசங்க மூலமா தான் வருவாரு. அந்த மாதிரி சிலபேரால பார்வை கிடைச்சுருக்கு என்று நெகிழ்கிறார்.
மேலும்
-
மேட்டூர் அணையை முதல்வர் நாளை திறக்கிறார்; இன்று நீர்வரத்து 10,485 கனஅடியாக அதிகரிப்பு
-
திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
-
மிஸ் டீன் இன்டர்நேஷனல் பட்டத்தை வென்றார் கியூபாவின் ஜோனா உரங்கா!
-
கிரைம் கார்னர்
-
குறைந்த விலைக்கு மொபைல் தருவதாக விளம்பரம் செய்து மோசடி: 2 பேருக்கு 'காப்பு'
-
தண்ணீர் பக்கெட்டில் விழுந்து குழந்தை பலி