நேபாள வெள்ளத்திற்கு காரணமான பனிப்பாறை சரிவு; தற்செயலாக வீடியோ பதிவு செய்த சீன ட்ரோன்
புதுடில்லி: நேபாள வெள்ளத்திற்கு காரணமான பனிப்பாறை உருகும் நிகழ்வு, சீனாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் எடுத்த ட்ரோன் வீடியோவில் தற்செயலாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பனிப்பாறை உருகியதால் நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, நேபாளத்தில் பெரும் பாதிப்பை உருவாக்கியுள்ளது. சேறு, சகதிகளுடன் கரைபுரண்டோடு பாய்ந்த இந்த வெள்ளம், ஒரு நகரையே மண்ணுக்குள் அழுத்தி விட்டது. இதுவரையில் 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். தோண்ட தோண்ட சடலங்கள் கிடைத்து வருவதால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனிடையே, பேரழிவை ஏற்படுத்திய இந்த வெள்ளம் தொடர்பாக பல்வேறு சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அவையனைத்தும் பார்ப்போரின் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் விதமாக இருக்கிறது.
இந்த நிலையில், வெள்ளத்திற்கு காரணமான பனிப்பாறை உருகும் நிகழ்வு, சீனாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் எடுத்த ட்ரோன் வீடியோவில் தற்செயலாக பதிவாகியுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 7,200 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் உள்ள லாங்டாங் லிருங் சிகரத்திற்கு அருகே மிகப்பெரிய அளவிலான பாறைகளும், பனிப்பாறைகளும் உருகி விழுவது போன்ற காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
இதே போன்று, 2021ல் உத்தரகண்ட்டிலும், 2023ல் சிக்கிமிலும், 2025ல் ஸ்விஸ் அல்ப்ஸ் ஆகிய இடங்களிலும் பனிப்பாறை உருகி விழுந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.