காசநோயாளிகளின் சளி மாதிரி சேகரிக்க ஊழியர்கள் எதிர்ப்பு
கோவை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், கோவையில் 450 பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும், ரூ.5,500 ஊக்கத்தொகையாக அளிக்கப்படுகிறது. ஆனால், புதுப்புது பணிகளை செய்ய, அதிகாரிகள் உத்தரவிடுவதாக புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக, காசநோயாளிகளின் சளி மாதிரி எடுத்து அதை பிரிட்ஜில் வைத்து, ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்படைக்க அறிவுறுத்தப்படுகிறது.
வீட்டின் சொந்த பயன்பாட்டு பிரிட்ஜில் இதை எப்படி வைக்க முடியும். ஆபா கார்டு, புற்றுநோய் பரிசோதனைகள், தாய்–சேய் நலப்பணிகள், மருத்துவ முகாம்களில் உதவிப்பணிகள் ஆகிய வேலைகளிலும் ஈடுபடுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்க மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,‘‘ தொற்றா நோய்களை பரிசோதிக்க தினமும் 2 மணி நேரம் மட்டும் வேலை என்ற ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டோம். எங்களுக்கு ஒருநாள் ஊதியமே ரூ.183 தான். ஆனால், 5–8 மணி நேரம் வேலை செய்கிறோம்.
காசநோயாளிகளுக்கான சளி மாதிரிகள் எடுக்கும் வேலையை இனி செய்வதில்லை என முடிவெடுத்துள்ளோம். தொற்று நோய்களான காய்ச்சல் முகாம், மலேரியா, டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபடுத்துகிறார்கள். ஆனால் அதற்கேற்ப ஊதியம் உயர்த்தவில்லை,’’ என்றார்.