எங்கள் கோரிக்கையையும் கேளுங்களேன் அரசின் கதவை தட்டும் மாற்றுத்திறனாளிகள்

கோவை: சட்டசபையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மானிய கோரிக்கையில், தங்களது தேவைகளை நிறைவேற்றும் வகையில் அறிவிப்புகள் வெளியிடாததால், மாற்றுத்திறனாளிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தங்களுக்காக பேசச்சொல்லி, அமைச்சர்கள் செங்கோட்டையன், சம்பத்குமார், விஜய் பாலாஜி, எம்.எல்.ஏ. கனிமொழி உள்ளிட்டோரிடம் 180 பக்க அறிக்கை அளித்தனர்.

அதில், மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு அளித்தல், ரூ.7,500 வரை உதவித்தொகை உயர்த்துதல், கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரியில் மண்டல ஆணையரகம் ஏற்படுத்துதல், மாற்றுத்திறனாளிகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைக்க இடம் தேவை, நிதி ஒதுக்குதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

சட்டசபையில் அறிவிப்பு வெளியிடாததாலும், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.கள் பேசாததாலும் வருத்தத்தில் உள்ள தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் பேரவை, மாற்றுத்திறனாளிகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், கோவை மாவட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மகளிர் நலச்சங்கம், மாற்றுத்திறனாளிகளின் குரல் ஆகிய அமைப்பினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

‘எங்களுக்காக எடுக்கும் முடிவுகளுக்கு எங்களையும் கேளுங்கள்’ என அவர்கள் கேட்கின்றனர்.

Advertisement