நேபாள வெள்ளத்தில் காணாமல் போன உறவுகள்: தேடி செல்வோருக்கு உதவ தமிழக அரசு சிறப்புக் குழு அறிவிப்பு
சென்னை: நேபாளம் பெருவெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்கள் குறித்த விவரங்களை அறிய காத்மாண்டு செல்லும் உறவினர்களுக்கு உதவ தமிழக அரசு சார்பில் 3 அலுவலர்கள் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இக்குழு காத்மாண்டுவில் முகாமிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது;
நேபாளத்துக்கு சுற்றுலா சென்றபோது, 2026ம் ஆண்டு ஆக. 26 போடே கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணாமல் போனதாகவோ அல்லது சிக்கித் தவிப்பதாகவோ தெரிவிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுவரை, தமிழகத்தைச் சேர்ந்த 21 சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டு, புதுடில்லி அழைத்து வரப்பட்டு, பின்னர், அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இன்னும் தமிழகத்தைச் சேர்ந்த 84 பயணிகள் குறித்த விவரங்கள் தொடர்ந்து தேடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சில விவரங்களை https://udb.nepalpolice.gov.np/disaster என்ற தமது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேபாள காவல்துறை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான விவரங்களை அறிய புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் கட்டுப்பாட்டு அறையை, 92895 16712 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும், 98685 30776 என்ற செல்போண் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
நேபாளம் செல்லும் உறவினர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும், சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் தமிழக அரசின் 3 அலுவலர்கள் கொண்ட குழு காத்மாண்டுவில் முகாமிட்டுள்ளது.
சத்திய சிவம் - செல்போன் எண் - 9868207259
தினேஷ் கண்ணன் - செல்போன் எண் - 9868530799
அஜய் - செல்போன் எண் - 9868224049
ஆகிய மூன்று அலுவலர்கள் காத்மாண்டுவிலிருந்து தேவையான உதவிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொள்வர்.
தமிழக அரசு அலுவலர்கள், நேபாள அரசு, இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து, சாத்தியமான அனைத்து வழிகளிலும் இடைவிடாது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.