நீதிபதியை மிரட்டிய வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டு சிறை

5

புதுடில்லி: கிரிமினல் வழக்கில் ஜாமின் பெற சுப்ரீம் கோர்ட் நீதிபதியை போல் பேசி நீதிபதியை மிரட்டியது மற்றும் போலி அடையாளங்களுடன் நீதித்துறை நடவடிக்கைகளில் தலையிட்ட விவகாரத்தில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு டில்லி நீதிமன்றம் 8 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.


இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டில்லி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளான். அவன் மீதான ஊழல் வழக்கு தொடர்பாக டில்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்ற சிறப்பு நீதிபதி பூனம் சவுத்ரி அமர்வில் வழக்கு விசாரணையில் இருந்தது.


இந்த வழக்கில் தன்னை விடுவிப்பதற்காக சுகேஷ் சந்திரசேகர், நீதிபதி பூனம் சவுத்ரியை மொபைல் எண்ணில் தொடர்பு கொண்ட சுகேஷ் சந்திரசேர், தன்னை சுப்ரீம் கோர்ட் நீதிபதி என அறிமுகம் செய்து கொண்டு, '' ஜாமின் அல்லது இடைக்கால ஜாமினில் தன்னை விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்'' என மிரட்டல் விடுத்துள்ளான்.


விசாரணையில், சுகேஷ் சந்திரசேகர் மிரட்டல் விடுத்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், போலி அடையாள அட்டை வாயிலாக நீதித்துறை நடவடிக்கைகளில் தலையிட முயன்றதும் உறுதியானது.


இந்த வழக்கில் விசாரணை நடத்திய தீஸ் ஹசாரி நீதிமன்றம், ஐபிசி சட்டப்பிரிவு 170( அரசு அதிகாரியை மிரட்டல்),189( காயம் ஏற்படுத்தும் வகையில் மிரட்டல் விடுத்தல்) மற்றும் 507( தொலைபேசிவாயிலாக தொடர்பு கொண்டு கிரிமினல் குற்றநடவடிக்கையில் ஈடுபடுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் அவனை குற்றவாளி என கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்து இருந்தது.


இந்த வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கிய திஸ் ஹசாரி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஹர்ஷிதா மிஸ்ரா, 170 மற்றும் 189 பிரிவுகளின் கீழ் சுகேஷ் சந்திரசேகருக்கு தலா 2 ஆண்டுகள் 507 வது பிரிவின் கீழ் 4 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார். மேலும், இந்த தண்டனையை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

Advertisement