ஹெச். ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து: சென்னை ஐகோர்ட் உத்தரவு

14

சென்னை: பாஜ மூத்த தலைவர் ஹெச். ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

லெனின் சிலை உடைக்கப்பட்டது போல, ஈவெரா சிலையும் உடைக்கப்படும் என்று 2018ம் ஆண்டு ஹெச். ராஜா தமது சமூக வலை தள பதிவில் பதிவிட்டு இருந்தார். இதையடுத்து, அவர் மீது, ஈரோடு டவுன் மற்றும் கருங்குளம் போலீஸ் ஸ்டேஷன்களில் தபெதிக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

மேலும், திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக அவதூறு கருத்துகளை எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டதாக மாஜி அமைச்சர் செல்வராஜ், ஈரோடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்து இருந்தார். இந்த இரு வழக்குகளும் சென்னையில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன. இந்த வழக்குகளில் ஹெச். ராஜாவுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து 2024ம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹெச். ராஜா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செப்.1) தீர்ப்பளித்தது. அதில், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் ஹெச். ராஜாவின் பேச்சு இல்லை. போதுமான ஆதாரங்களும் இல்லை என்று தெரிவித்து, அவருக்கான தண்டனையை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

Advertisement