தினமலர் செய்தி எதிரொலி ரோட்டில் குவித்த சாக்கடை கழிவை அகற்றியது பேரூராட்சி நிர்வாகம்
தொண்டாமுத்தூர்: தினமலர் செய்தி எதிரொலியாக, தொண்டாமுத்தூர், சந்தைப்பேட்டையில், போக்குவரத்திற்கு இடையூறாக, மலைபோல் குவிந்து கிடந்த சாக்கடை கழிவை, தொண்டாமுத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சுத்தம் செய்தது.
தொண்டாமுத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட, தொண்டாமுத்தூர் சந்தைப்பேட்டை பஸ் ஸ்டாண்டுக்கு, 20க்கு மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. கடந்த வாரம் இரவில் பெய்த கனமழையின்போது, அப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறிய கழிவுநீர், சந்தைப்பேட்டை வளாகத்தில் உள்ள மழைநீர் வடிகாலில் கழிவுநீர் வெளியேறியது.
அப்போது பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்களால், மழைநீர் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு, சாக்கடை கழிவுநீர் தேங்கியது. பேரூராட்சி நிர்வாகம், மழைநீர் வடிகாலில் இருந்த அடைப்புகளை நீக்கி, அந்த சாக்கடை கழிவுகளை, நரசீபுரம் மெயின்ரோட்டில் மலைபோல் குவித்து வைத்திருந்தது.
4 நாட்களாகியும் அகற்றப்படாத சாக்கடை கழிவால் துர்நாற்றம் வீசியது. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதுகுறித்து நேற்று நமது நாளிதழில் படத்துடன் செய்து வெளியானது. இதையடுத்து தொண்டாமுத்தூர் பேரூராட்சி நிர்வாகம், சாக்கடை கழிவை நேற்று சுத்தம் செய்தது. போக்குவரத்து சீரானதால் மக்கள் நிம்மதியடைந்தனர்.