8 மாதங்களில் 134 போக்சோ வழக்கு குழந்தை திருமணத்தால் 739 கர்ப்பம்
கோவை: குழந்தைகள் நலன் அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய குழு தலைவர் விஜயா, உறுப்பினர்கள் காவியா, ஜெயசுதா ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக இவர்கள் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், விடுதிகள், கூர்நோக்கு இல்லங்கள், காப்பகங்களில் ஆய்வு நடத்தினர். பள்ளிக்கல்வி, குழந்தைகள் பாதுகாப்பு, சுகாதாரம், காவல், சமூக நலம் போன்ற துறைகளின் அலுவலர்களுடன் நடத்திய ஆலோசனை நடத்தினர்.
ஜன. முதல் ஆக. வரை குழந்தைத் திருமணம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 982 வழக்குகள் பதிவாகி உள்ளன என தெரிவிக்கப்பட்டது. வீட்டை விட்டு வெளியேறிய குழந்தைகள் தொடர்பாக 156 வழக்குகளும். 91 சிறுமிகள், 26 சிறுவர்கள் காணாமல் போன வழக்குகளும் இதில் அடக்கம்.
எட்டு மாதங்களில் 134 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் 107 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 130 வழக்குகள் கோர்ட்டில் விசாரணைக்கு வந்துள்ளன. 5 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியுள்ளது.
மாவட்டத்தில் 9,074 கர்ப்பிணிகள் கண்டறியப்பட்டனர். அதில் 739 பேர் 18 வயது ஆகாதவர்கள். இது குழந்தை திருமணத்தால் உருவான சிக்கல். இத்தகைய குழந்தை கர்ப்பம் அதிகபடமாக பொள்ளாச்சியில் 5 சதவீதமாகவும், ஆனைமலையில் 4.7 சதவீதமாகவும் உள்ளது. இந்த நிலை ஏற்படால் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.