நகரை பசுமையாக்கும் திட்டம் துவக்கம் பசுமை குடில் அமைத்து நாற்றுக்கள் உற்பத்தி
உடுமலை: உடுமலை நகரை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ், நாற்றுப்பண்ணை அமைத்து, நாற்றுக்கள் உற்பத்தி செய்து நடவு செய்யப்பட உள்ளது.
உடுமலை நகராட்சியில், 33 வார்டுகளில், 150க்கும் மேற்பட்ட பொது ஒதுக்கீட்டு நிலங்கள், பூங்காக்கள் உள்ளன.
நகரை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ், நகராட்சி சார்பில், நாற்றுப்பண்ணை அமைத்து, மரக்கன்றுகள் உற்பத்தி செய்து, நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, நகராட்சி எஸ்.என்.ஆர்.,லே– அவுட்டிலுள்ள பூங்காவில், பசுமை குடில் அமைத்து, நாற்றுக்கள் உற்பத்தி செய்யும் பணி துவங்கியுள்ளது.
இங்கு, புங்கன், வேம்பு, பாக்கு, நாவல்ல பாதாணி, செண்பகப்பூ, வரித்தாழை, மல்லிகை, முல்லை, ரோஜா உள்ளிட்ட அலங்கார செடிகள், ரணகள்ளி, இட்லிப்பூ, சீமைக்கிழங்கு, நாக மல்லி, மார்பிள் ஹார்ட், கற்பூர வள்ளி, கற்றாழை, செம்பருத்தி என மரக்கன்றுகள் மற்றும் பூச்செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும், மரக்கன்றுகள், பூச்செடிகள், நகரிலுள்ள பூங்காக்கள், பிரதான ரோடுகளின் மையத்தடுப்புகள், ரவுண்டான, ரோட்டோர பூங்காக்கள் என பொது இடங்களில் நடவு செய்து பராமரிக்கப்பட உள்ளது.
மேலும், பொதுமக்களுக்கும் இத்திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள், செடிகள் வழங்கப்பட உள்ளதாக, நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.