அந்நியச் செலாவணி சேமிப்பு; ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தல்

20


புதுடில்லி: அந்நியச் செலாவணியைச் சேமிக்க வேண்டியுள்ளது என ஸோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: பொருளாதாரம் 7.8% என்ற விகிதத்தில் வளர்ந்து வரும் நிலையில், வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம், தங்கம் வாங்க வேண்டாம், வெளிநாடுகளில் திருமணங்களை நடத்த வேண்டாம் என்று பிரதமர் ஏன் நம்மை அறிவுறுத்துகிறார்? இதற்கான விளக்கத்தை நான் அளிக்கிறேன்.

கிழக்கு ஆசிய நாடுகள் (ஜப்பான், தைவான், தென் கொரியா மற்றும் பின்னர் சீனா) அனைத்தும், விரைவான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியையும் அதே வேளையில் அந்நியச் செலாவணியைச் சேமிக்க வேண்டிய கட்டாயத்தையும் கொண்ட ஒரு காலகட்டத்தைக் கடந்து வந்தன.

நமது பொருளாதாரம் நல்ல வேகத்தில் வளர்ந்து வருகிறது; இருப்பினும், எரிசக்தி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரண்டிலும் நாம் இன்னும் இறக்குமதியைச் சார்ந்தே இருக்கிறோம். உண்மையில், பொருளாதாரம் எவ்வளவு வேகமாக வளர்கிறதோ, அந்தளவுக்கு எரிசக்தி மற்றும் தொழில்நுட்ப தேவையும் அதிகரிக்கிறது.

அந்த இறக்குமதிச் சார்பைச் சமன் செய்ய, நாம் அதிக அளவில் ஏற்றுமதி செய்ய வேண்டியுள்ளது; தற்போது நமது ஏற்றுமதியும் அதிகரித்து வருகிறது. இருப்பினும், நமது ஏற்றுமதிப் பொருட்களுக்கும் கூட மேம்பட்ட தொழில்நுட்பம் தேவைப்படுகின்றன; இவற்றை நாம் இப்போதைக்கு இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.

இத்துறைகள் அனைத்திலும் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக முன்னேறுவதற்கு நீண்ட காலம், பெரும்பாலும் பல ஆண்டுகள் தேவைப்படும். நாம் ஒரு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம், ஆனால் நமக்கு இன்னும் கால அவகாசம் தேவை.

மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக வளர்வதற்கு கிழக்கு ஆசிய நாடுகள் எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டன என்பதைப் பாருங்கள். அந்நியச் செலாவணியைச் சேமிக்கக் கடுமையாக உழைத்த அதே வேளையில், அவர்களின் பொருளாதாரங்களும் வேகமாக வளர்ந்து வந்தன. அதைத்தான் நமது அரசும் செய்ய முயற்சிக்கிறது.

அனைத்து மேம்பட்ட தொழில்நுட்பங்களிலும் நாம் திறனை வளர்த்துக்கொண்டு, நாமே தொழில்நுட்பத்தை உருவாக்கிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் எரிசக்தித் துறையில் தற்சார்பை எட்டிய பிறகு, அந்நியச் செலாவணியைச் சேமிக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்காது. வளர்ச்சிக்குத் தேவையான மூலதனம் தேவைப்படும்.

வேகமாக வளர்ந்து வரும் ஒரு நிறுவனத்தின் சூழலைப் போன்றது இது. வளர்ச்சிப் பணிகளில் முதலீடு செய்ய அந்த நிறுவனம் தனது மூலதனத்தைச் சேமித்து வைக்க வேண்டியிருக்கும். அதேபோல, நமது நாடும் அந்நியச் செலாவணியைச் சேமிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.

Advertisement