எதிர்பார்ப்பு உள்ளாட்சிகளில் நியாயமான வார்டு வரையறை மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பு தேவை

சிங்கம்புணரி, செப். 5-

விரைவில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு வரையறை பணியை நியாயமான முறையில் நடத்த மக்களிடம் எதிர்பார்ப்பு நிகழ்ந்துள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்கள், மற்றும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஏற்கனவே முடிந்துள்ளது. தற்போது இருக்கும் பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2027 பிப்., மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சேர்த்து அடுத்தாண்டு மார்ச்சில் தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது.

இந்நிலையில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் வார்டு மறு வரையறை செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. முதற்கட்டமாக அனைத்து ஊராட்சிகளிலும் வார்டு வரையறை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அந்தந்த பி.டி.ஓ.,க்கள் மூலம் ஊராட்சி செயலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது சிங்கம்புணரி பேரூராட்சி உள்ளிட்ட இடங்களில் வார்டு வரையறையில் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தியதால் பல்வேறு குளறுபடி ஏற்பட்டது. கட்சி நிர்வாகிகளின் விருப்பத்திற்கு ஏற்ப சில வார்டுகளின் எல்கை பிரிக்கப்பட்டதாகவும், வேறு வார்டுகளில் உள்ள வாக்காளர்களின் பெயர் மற்றொரு வார்டுகளுக்கு மாற்றப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதனால் கடந்த தேர்தலில் வாக்காளர்களும், வேட்பாளர்களும் கடும் அவதிக்கு ஆளாகினர். எனவே வரும் தேர்தலில் இது போன்ற குளறுபடி ஏற்படாமல் இருக்க, வார்டு வரையறைகளை நியாயமாகவும், தெளிவாகவும் நடத்த வேண்டும்.

Advertisement