தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் திருவள்ளூரில் வரும் 17ல் தொடக்கம்

திருவள்ளூர், செப். 5–

தமிழக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில், வரும் 17ல் தொடங்க உள்ளதாக, கலெக்டர் கவிதா தெரிவித்தார்.

தமிழக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக, திருவள்ளூர் கலெக்டர் கவிதா, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, கலெக்டர் கவிதா கூறியதாவது:

தமிழக அரசு அறிவித்த ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில், வரும் 17ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின்கீழ், ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே, ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில், திட்டத்தின் தொடக்க விழாவிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்தேன்.

ஆய்வின்போது, திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ள பயனாளிகளை கண்டறிதல், தேவையான ஆவணங்கள் மற்றும் பதிவுகளை முறையாக பராமரித்தல், பயனாளிகளின் விபரங்களைத் தயாராக வைத்திருத்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து, மருத்துவ கல்லுாரி முதல்வர் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

உடன், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் மோகன்காந்தி, மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் பிரியா ராஜ், கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement