அரசு மருத்துவ கல்லுாரியில் தண்ணீர் தட்டுப்பாடு போர்வெல், கிணறுகள் வறண்டதால்...

திண்டுக்கல், செப்.6-

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் போர்வெல்கள், கிணறுகள் வறண்டதால் தண்ணீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது. தேவையை பூர்த்தி செய்ய தனியாரிடமிருந்து குடிநீர் பெற்று மருத்துவமனை நிர்வாகம் சமாளிக்கிறது.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நாள்தோறும் 1,750 உள்நோயாளிகள், 2,700 வெளிநோயாளிகள் என  மொத்தம் 4500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர்.

உள்நோயாளிகள் உதவிக்காக குறைந்தபட்சம் ஒருவர் வீதம் 2 ஆயிரம்  பேர், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தேவைக்காக பணிபுரிகின்றனர்.இதுதவிர நாள்தோறும் 25 முதல் 30 பிரசவங்கள் நடக்கிறது. கை, கால், வயிறு அறுவை சிகிச்சை, தலைக்காயம், எலும்பு முறிவு,  கட்டி உள்ளிட்ட பல்வேறு இனங்களில் தினசரி 184 அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன.

மினி நகரத்தை உள்ளடக்கி இயங்கும் திண்டுக்கல்  அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் தினசரி தேவைக்கு மட்டும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

இந்த தேவையை மருத்துவமனை வளாகத்தில் உள்ள 13 போர்வெல்கள், 3 கிணறுகள், மாநகராட்சி மூலம் லாரிகளில் வழங்கப்படும்  தண்ணீர் மூலம் பூர்த்தி செய்து வந்தனர். தற்போதைய சூழலில் மருத்துவமனை போர்வெல்கள், கிணறுகள் அனைத்தும் வறண்டுவிட்டது.  மாநகராட்சியிலும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக இரண்டு நாள்களுக்கு ஒருமுறையே மருத்துவமனைக்கு லாரிகளில் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த அளவு போதுமானதாக இல்லாததால் தண்ணீர் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. எனவே மருத்துவமனை  தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தனியார்களிடம் பணம் செலுத்தி லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தேவை பூர்த்தி  செய்யப்படுகிறது.நாளொன்றுக்கு 9 லாரி தண்ணீர் தேவைப்படும் நிலையில் மாநகராட்சி வழங்கும் நீரை தவிர்த்து தினசரி 6 லாரி தண்ணீரை  மருத்துவமனை நிர்வாகம் தனியாரிடமிருந்து பெறுகிறது. இதற்காக மாதந்தோறும் ரூ.2 லட்சம் மருத்துவமனை நிர்வாகம் செலவிடுகிறது.

Advertisement