பொது அதிகாரம் தொடர்பான வழக்கும் சொத்துக்கு புதிய வில்லங்கம்!

1

சொத்து வாங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவோர், ஆவண ரீதியான பல்வேறு விஷயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும். சொத்தை அதன் சட்டப்பூர்வ உரிமையாளரிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும் என்பதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.

ஒரு சொத்து விற்பனைக்கு வருகிறது என்றால், அதை விற்பவர் அதன் முறையான உரிமையாளரா என்று பார்க்க வேண்டியது அவசியம். சில சமயங்களில் சொத்தின் உரிமையாளர்கள் அதை விற்பதற்கு பொது அதிகார அடிப்படையில் முகவர்களை நியமிப்பது வழக்கம்.

சொத்தின் உரிமை யாளர் நேரடியாக முன்னின்று விலை பேசுவது உள்ளிட்ட பணிகளை முடித்தாலும், பத்திரப்பதிவுக்கு வர இயலாத சூழலில், அவர் தனது சார்பில், விற்பனை ஆவணத்தில் கையெழுத்திட்டு பதிவு பணிகளை முடிக்க பொது அதிகார அடிப்படையில் ஒரு முகவரை நியமிக்கலாம்.

இவ்வாறு நியமிக்கப்படும் முகவர் விஷயத்தில், அனைத்து விஷயங்களும் உரிமையாளரின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதால் பெரிய சிக்கல் ஏற்படாது.

ஆனால், சில இடங்களில் உரிமையாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிக்கொண்டு பொது அதிகாரம் அளித்துள்ள நிலையில், முகவர்கள் தான் விற்பனை செய்வார்கள். இது போன்ற சொத்துக்களை வாங்கும் போது, அதற்கான பொது அதிகாரம் கொடுத்த உரிமையாளர் உயிருடன் இருக்க வேண்டும்.

இதுமட்டுமல்லாது அந்த பொது அதிகார ஆவணத்தை உரிமையாளர் ரத்து செய்யாமல் இருக்கிறார் என்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும். பொது அதிகார பத்திரத்தை உரிமையாளர் தன்னிச்சையாக ரத்து செய்ய முடியும். மக்கள் இதில் கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

நீங்கள் வாங்கும் சொத்துக்கான பொது அதிகார ஆவணம் ரத்து செய்யப்படாமல் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். இதே போன்று, பொது அதிகாரம் கொடுத்த உரிமையாளர், முகவர் இடையே சட்ட ரீதியாக எந்த பிரச்னையும் இல்லை என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

சில இடங்களில் பொது அதிகாரம் கொடுத்த உரிமையாளர், அதை ரத்து செய்யாமல், வேறு ஒரு நபரிடம் விலை பேசி சொத்தை விற்றுவிட நடவடிக்கை எடுக்கலாம். இதில் சொத்து உரிமையாளர் மீது பொது அதிகார முகவர் வழக்கு தொடர்ந்து இருக்கலாம்.

இன்னும் சில இடங்களில் சொத்து உரிமையாளர், பொது அதிகார முகவர் மீது வழக்கு தொடர்ந்து இருக்கலாம். இது போன்ற வழக்கு பிரச்னைகள் வில்லங்க சான்றிதழில் சேராது என்பதால், சொத்து வாங்கும் மக்களுக்கு எளிதில் தெரியாமல் போய்விடும்.

இது போன்ற சூழலில், சொத்து வாங்குவோர் வில்லங்க சான்றிதழை மட்டும் பார்த்து அலட்சியமாக இருந்தால், பல்வேறு சட்ட சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். இத்தகைய சொத்துக்கள் விற்பனைக்கு வரும் நிலையில், வாங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவோர், பத்திரப்பதிவுக்கு தடை மனு எதுவும் நிலுவையில் உள்ளதா என்பதை விசாரிக்க வேண்டும்.

சொத்து அமைந்துள்ள பகுதிக்கான சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் சென்று விசாரித்தால், இது தொடர்பான விஷயங்கள் தெரிய வரும். இதில் ஏற்படும் வழக்குகளும் சொத்து மீதான வில்லங்கம் தான் என்பதை மக்கள் புரிந்து செயல்பட வேண்டும் என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.

சொத்துக்கான பொது அதிகார ஆவணம் ரத்து செய்யப்படாமல் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். பொது அதிகாரம் கொடுத்த உரிமையாளர், முகவர் இடையே சட்ட ரீதியாக எந்த பிரச்னையும் இல்லை என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Advertisement