கோட்டையில் குவிந்த த.வெ.க.,வினர் கட்டுப்படுத்த திணறிய போலீஸ்
சென்னை: சட்டசபையில், முதல்வரின் பதிலுரையை காண, தமிழகம் முழுதும் இருந்து, தலைமை செயலகம் வந்த, த.வெ.க.,வினரை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
சட்டசபையில், முதல்வரிடம் உள்ள காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம், கடந்த, 3ம் தேதி நடந்தது.
அதன்பின், தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை முடிந்து, நேற்று சட்டசபை கூடியது, காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு, முதல்வர் விஜய் பதில் அளித்தார்.
சட்டசபையில் முதல்வரின் பதிலுரையை காண்பதற்காக, தமிழகம் முழுதும் இருந்து, த.வெ.க.,வினர் ஏராளமானோர் தலைமை செயலகம் வந்தனர்.
இதன் காரணமாக, கூட்டத்தை கட்டுபடுத்த முடியாமல், போலீசார் திணறினர். சட்டசபை நிகழ்வுகளை பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து காண, ஒரே நேரத்தில், 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். த.வெ.க., ஆட்சி அமைந்த பின், முதல்வர் விஜயை பார்ப்பதற்காக, எம்.எல்.ஏ.,க்களிடம் அனுமதி சீட்டு பெற்று, அவரது கட்சியினர் அதிக அளவில், தலைமை செயலகம் வருகின்றனர்.
நேற்று ஏராளமானோர் குவிந்ததால், அவர்களை கட்டுப்படுத்த, போலீசார் திணறினர். போலீசார் கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தியபோதும், அதை தாண்டி சென்றனர். அவர்களை சிரமப்பட்டு போலீசார் தடுத்தனர். அதேபோல், சட்டசபை வளாகத்தில், சட்டசபை நிகழ்ச்சிகளை காண வந்தோர், நீண்ட வரிசையில் காத்திருந்தனர் .
காலதாமதமானதால், அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, தலைமைச் செயலகம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.
இந்த களேபரம் காரணமாக, சட்டசபை நிகழ்வுகளை காண வந்த, பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியரும், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.