கொள்ளையடிக்க ஆயுதங்களுடன் காரில் சென்ற கும்பல் கைது

உளுந்துார்பேட்டை: ஆயுதங்களுடன் கூட்டுக் கொள்ளையடிப்பதற்காக காரில் சென்ற கும்பல் போலீசாரிடம் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உளுந்துார்பேட்டை தாலுகா, எடைக்கல் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், களமருதுார் சப்–இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் போலீசார் எ.அத்திப்பாக்கம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். நேற்று மதியம் 3:30 மணியளவில் அவ்வழியே சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அந்த காரில் 2 அரிவாள், சூறை கத்தி, இரும்பு கம்பி, சுத்தியல் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

காரில் வந்த 6 பேரில் ஒருவர் தப்பி தலைமறைவானார். மற்ற 5 பேரை மடக்கி பிடித்த போலீசார், களமருதுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

விசாரணையில், கூட்டுக் கொள்ளை அடிப்பதற்காக திட்டம் போட்டு காரில் ஆயுதங்களுடன் சென்றது தெரிய வந்தது.

அவர்கள், உளுந்துார்பேட்டை தாலுகா களமருதுார் பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகன் அஜித்குமார் 19; டி. ஒரத்துார் பகுதியை சேர்ந்த பழனிவேல் மகன் விஸ்வா 22; களமருதுார் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் மகன் திலீப் குமார் 19; களமருதுார் பகுதியை சேர்ந்த இளங்கோவன் மகன் அறிவழகன், 19; களமருதூர் பகுதியை சேர்ந்த முருகன் மகன் செல்வம், 19; ஆகியோர் என தெரிவந்தது.

இது குறித்து களமருதுார் போலீசார் வழக்கு பதிந்து 5 பேரையும் கைது செய்து கார் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

தப்பி ஓடிய, திருவெண்ணைநல்லுார் தாலுகா டி. குன்னத்தூர் பகுதியை சேர்ந்த வாசுதேவன் மகன் விக்னேஷ், 22; என்பவரை தேடி வருகின்றனர்.

Advertisement