அரசு பள்ளி மாணவனும் ராணுவ அதிகாரி ஆகலாம் கனவை விதைக்கும் ஓய்வு பெற்ற மேஜர் கவுரவ் மிஸ்ரா

தோளில் கம்பீரமாக ஜொலிக்கும் ராணுவ நட்சத்திரங்கள், நெஞ்சுக்குள் கனன்றுகொண்டிருக்கும் மாறாத தேசப்பற்று... 11 ஆண்டுகள் இந்திய ராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற மேஜர் கவுரவ் மிஸ்ராவின் அடையாளங்கள்.

மனைவியும் இந்திய விமானப்படையின் முன்னாள் விமானி என்ற பெருமையோடு, ஆயுதப்படைகளின் கம்பீரப் பின்னணியில் இருந்து வந்த இவர், ஓய்வுக்குப் பிறகு கையில் எடுத்திருக்கும் பணிதான் மிக உயரியது.

எல்லையில் துப்பாக்கி ஏந்தி நின்றது நேற்று; வகுப்பறைகளில் நாளைய ராணுவ தளபதிகளை உருவாக்குவது இன்று என்ற கொள்கையோடு, புதுச்சேரியின் அரசு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களின் எதிர்காலத்திற்குச் சிறகளித்து வருகிறார். அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் எளிய பின்னணி கொண்ட மாணவர்களின் கண்களில், இந்திய ஆயுதப்படைகளின் உயர் அதிகாரியாகும் கனவை விதைத்து வரும் மேஜர் கவுரவ் மிஸ்ராவு டன் சிறப்புச் சந்திப்பு:

சார்... ஓய்வுக்கு அப்புறம் அமைதியான வாழ்க்கை வாழாம, ஏன் இந்த முயற்சி என்று கேள்வியை வீசியதும் சிரித்தபடியே உற்சாகமாக பேச ஆரம்பித்தார்.

ராணுவத்திலிருந்து ஓய்வு பெறலாமே தவிர, தேசப்பணியிலிருந்து ஓய்வு பெற முடியாதுங்க. தனியார் அகாடமிகளுக்கு பல்லாயிரக்கணக்கில் பணம் கட்டி பயிற்சி பெற முடியாத எத்தனையோ கிராமத்து திறமைசாலிகள் நம் அரசு பள்ளிகளில் இருக்காங்க.

ராணுவ அதிகாரி ஆவதெல்லாம் நமக்கு செட் ஆகாதுனு நினைக்கிற அவங்களோட தயக்கத்தை உடைச்சு, உங்களாலும் முடியும்னு வழிகாட்டவே இந்த முயற்சி.

இதுவரைக்கும் உங்களோட பயணம் எப்படி போய்ட்டு இருக்கு?

ரொம்பவே நிறைவா இருக்கு. இதுவரைக்கும் புதுச்சேரில 11 அரசு பள்ளிகள், 13 அரசு கல்லுாரிகள்ல முற்றிலும் இலவசமா வழிகாட்டுதல் நிகழ்சிகளை நடத்தியிருக்கேன். நம்மளாலயும் ஆபீசர் ஆக முடியுமா சார்'னு தயங்கி தயங்கி கேக்குற பசங்க, செஷன் முடியும்போது நிச்சயம் நான் ஆர்மி ஆபீசர் ஆவேன் சார்னு கெத்தா சொல்லிட்டுப் போகும்போது கிடைக்கிற திருப்தி இருக்கே... அதுக்கு ஈடு இணையே இல்லை.

மாணவர்களுக்கு முக்கியமா என்ன விஷயங்களை புரிய வைக்கிறீங்க?

ராணுவத்துல சேர்றதுனா வெறும் சிப்பாய் பணி மட்டுமில்ல... அரசிதழ் பதிவு பெற்ற உயர் அதிகாரியாகவே சேர முடியும்னு புரிய வைக்கிறேன். பிளஸ் 2 படிக்கும்போதே என்.டி.ஏ., தேர்வு மூலமாவோ, டி.இ.எஸ் தொழில்நுட்ப நுழைவு மூலமாவோ, இல்லனா கடற்படையின் பி.டெக் திட்டம் மூலமாவோ நேரடியாக அதிகாரியாகலாம்.

டிகிரி முடிச்சவங்களுக்கும் முப்படைப் பிரிவுகளிலும் ஏகப்பட்ட வாய்ப்புகள் இருக்கு. தகுதி, தேர்வுகள், மருத்துவத் தகுதிகள்னு எல்லாமே தெளிவா விளக்குறேன்.

எஸ்.எஸ்.பி., நேர்காணல்னா பல மாணவர்களுக்கு பயம் இருக்கே... அதை எப்படி கடக்குறது?

எஸ்.எஸ்.பி., நேர்காணல்ங்கிறது உங்களோட பெரிய ஆங்கிலப் புலமையையோ, குடும்பப் பின்னணியையோ பாக்குற தேர்வு இல்லை; அது உங்களோட ஆளுமைக்கான தேர்வு. உங்ககிட்ட தன்னம்பிக்கை, தலைமைத்துவ பண்பு, தெளிவான சிந்தனை இருந்தா போதும். பணக்கார வீட்டுப் பசங்களால மட்டும்தான் ஆபீசர் ஆக முடியும்னு எந்த விதியும் இல்லை. சரியான வழிகாட்டுதலும் ஒழுக்கமும் இருந்தா அரசு பள்ளி மாணவனும் ஆர்மி ஆபீசர் ஆகலாம்.

கடைசியா... மாணவர்களுக்கு நீங்க சொல்ற செய்தி என்ன? கனவு மட்டும் கண்டா போதாது, அதை அடையுறதுக்கான பாதையில தீவிரமா ஓடணும். எந்தக் கட்டணமும் இல்லாமல், முழுத் தன்னார்வத்தோட உங்களுக்காக வழிகாட்ட நான் தயார்... இந்திய ராணுவத்தில் அதிகாரியாக கம்பீரமாக நடைபோட நீங்க தயாரா என்கிறார் மாணவர்களை நோக்கி.

துப்பாக்கிகளின் சத்தமும், எல்லையின் கடுங்குளிரும் பழகிய ஒரு ராணுவ அதிகாரியின் இதயம், இன்றைக்கு அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலத்திற்காகத் துடித்துக்கொண்டிருக்கிறது. கம்பீரமாக எல்லை காக்கும் ஒரு ராணுவ அதிகாரியின் நிழலில், புதுச்சேரியின் அடுத்த தலைமுறை தளபதிகள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

தொடர்புக்கு: மாணவர்களுக்கான இலவச வழிகாட்டுதல் முகாம்களுக்கு தொடர்பு கொள்ள 7840024661 அல்லது gaurav.mishra_26791@yahoo.com என்ற இ.மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement