பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சியுடன் ஏழை மாணவர்களின் கல்விக்கனவை நனவாக்கும் எடச்சித்துார் அரசு உயர்நிலைப் பள்ளி
விருத்தாசலம் அடுத்த எடச்சித்துார் கிராமத்தில், 2011ம் ஆண்டு வரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வந்தது. அதன்பின், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
இருப்பினும் போதிய வகுப்பறைகள் இல்லாத நிலையில், அப்போதைய சி.இ.ஓ., ஜோசப் அந்தோணிராஜ் உத்தரவால், எஸ்.எஸ்.ஏ., திட்ட சி.இ.ஓ., அருள்மொழிதேவி மற்றும் டி.இ.ஓ., வடிவேலு ஆகியோர் பள்ளியை ஆய்வு செய்தனர். அவர்களது அறிக்கையின்படி, அப்போதைய கலெக்டர் முயற்சியுடன் ஐந்து வகுப்பறைகள் புதிதாக கட்டித்தரப்பட்டது.
கடந்த 2014ம் ஆண்டில் ஒவ்வொரு பாடத்திற்கும் 3 ஆசிரியர்கள் வீதம், 15 ஆசிரியர்களுடன் செயல்பட துவங்கியது. பின்னர், பள்ளி விரிவாக்கத் திட்டத்தின் கீழ் தமிழக அரசுஆய்வக வசதி, கூடுதல் வகுப்பறைகள், ஸ்மார்ட் கிளாஸ், கம்ப்யூட்டர் லேப் மற்றும் சுகாதாரமான கழிப்பறைகளுடன் புதிதாக மூன்று தளங்கள் அடங்கிய கட்டடத்துடன் பள்ளி செயல்பட்டு வருகிறது.
விருத்தாசலம் கல்வி மாவட்டத்திலேயே 464 மாணவர்கள், 20 நிரந்தர ஆசிரியர்கள், 2 அலுவலக பணியாளர்கள் மற்றும் 1 பகுதி நேர ஆசிரியர்களை கொண்டு செயல்படும் மிகப்பெரிய இருபாலர் பள்ளி இது. இப்பள்ளியில் எடச்சித்துார், சிறுவம்பார், காட்டுப்பரூர், பிஞ்சனுார், வலசை, சின்னப்பரூர், மற்றும் புதுார் கிராம மாணவர்கள் படிக்கின்றனர்.
பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுவையான சத்துணவு, விசாலமான விளையாட்டு மைதானம், மின்விசிறிகள் கொண்ட வகுப்பறைகள் என ஒளிரும் இப்பள்ளியானது, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது.
மேலும், மாவட்ட, மாநில அளவில் கல்வி, விளையாட்டு, கல்வி இணை செயல்பாடுகள் மூலம் சிறந்து விளங்குகிறது. அரசு பொதுத்தேர்வுகளில் மாணவர்களை 100 சதவீத தேர்ச்சி பெற வைப்பதுடன் ஏழை கிராமப்புற மாணவர்களின் கல்வி கனவுகளை இப்பள்ளி நனவாக்கி வருகிறது.
இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என கிராம மக்கள், ஆசிரியர்கள் இணைந்து, அரசுக்கு உரிய பங்களிப்பு நிதியை செலுத்தி 5 ஆண்டுகள் ஆகிறது. இருப்பினும் பள்ளியை தரம் உயர்த்த பள்ளி கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெறும் மாணவர்கள், மேல்நிலை கல்விக்கு மாற்று பள்ளிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. கிராமப்புற மாணவர்கள் நலனில் அக்கறை செலுத்தும் வகையில் இந்த அரசாவது, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதுபோல், சரிவர பஸ் வசதி இல்லாத நிலையில், பொதுத் தேர்வுகளுக்கு மங்கலம்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, தேர்வு மையமாக செயல்படவும் கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான் கடந்த 19 ஆண்டுகளாக கணித பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சியையும் கொடுத்துள்ளேன். கணிதத்தில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுக்கும் அளவுக்கு மாணவர்களை தயார்படுத்துவதே எனது தலையாய கடமை. எடச்சித்துார் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியராக உள்ளேன். 2024 - 25 கல்வியாண்டில் 10ம் வகுப்பு கணித ஆசிரியராக இருந்து, 100 சதவீத தேர்ச்சி அளித்தேன். அப்போது, எனது மாணவர் நித்தீஸ் 496 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம், மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்தார். கல்வியுடன் அரசின் அனைத்து நலத்திட்டங்களும், அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கச் செய்வதே எனது நோக்கமாகும். நான் பொறுப்பு தலைமை ஆசிரியராக இருந்தாலும் அனைத்து ஆசிரியர்களும் எனக்கு முழுமையான ஒத்துழைப்பு தருவதால், இப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஒத்துழைப்புடன் இப்பள்ளியை, தமிழகத்திலேயே முதன்மையாக பள்ளியாக வருங்காலங்களில் மாற்றிக் காட்டுவோம் என்றார். -ஜெயப்பிரகாஷ் தலைமை ஆசிரியர் (பொறுப்பு).
கடந்த 2011ம் ஆண்டு முதல் தமிழ் பாட ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். என்னுடைய பாடத்தில் தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சியை தருவது மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது. மாணவர்கள் நமது தாய்மொழியான தமிழில் பிழையின்றி வாசிக்கவும், எழுதவும் அதிக அளவில் முயற்சிகளை மேற்கொள்கிறேன். இதனால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் அதிக மதிப்பெண்களை சிரமமின்றி மாணவர்கள் எடுத்து வருகின்றனர். என்னுடைய வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மீது முழுமையான ஈடுபாட்டை ஏற்படுத்தி வருகிறேன். -பத்மாவதி, பட்டதாரி ஆசிரியர்.
இப்பள்ளியில் மாணவர்களிடையே படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அதிகளவு ஏற்படுத்தி வருகிறேன். ஒழுக்கத்தின் அவசியத்தையும் எடுத்துச் சொல்லி வருகிறேன். தமிழ் இலக்கணங்களை எளிய முறையில் நடத்தி மாணவர்களுக்கு பிடித்த ஆசிரியராக இன்றளவும் உள்ளேன். என்னுடைய பாடத்தில் தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சியை தருவது பெருமையாக உள்ளது. -திலகம், பட்டதாரி ஆசிரியர்.
நான் பள்ளியில் சேர்ந்த 2014ம் ஆண்டு முதல் சமூக அறிவியல் பாடத்தில் தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி தருகிறேன். அதுமட்டுமின்றி சமூக அறிவியல் பாடங்களில் ஆண்டுதோறும் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தி வருகிறேன். போட்டித் தேர்வுகளுக்கும் மாணவர்களை ஒருங்கிணைத்து வருகிறேன். மாணவர்களுக்கு பிடித்த ஆசிரியராய் இருப்பதில் பெருமகிழ்ச்சி. -ராஜிவ்காந்தி, பட்டதாரி ஆசிரியர்.
கடந்த 2014 முதல் கணித பாட ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். ஆண்டுதோறும் கணித பாடத்தில் 100 சதவீத தேர்ச்சியளிப்பது மட்டுமின்றி கணிதத்தில் முதல் மதிப்பெண்ணையும், அதிக சராசரி மதிப்பெண்களையும் வழங்கி வருகிறேன். உயர்வழிகாட்டி ஆசிரியராகவும் செயல்படுவதால் மாணவ மாணவிகளிடம் படிப்பின் அவசியத்தை புரிய வைத்து, எதிர்காலத்தில் அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் நேர்மறை எண்ணங்களையும் ஏற்படுத்தி வருகிறேன். என்னுடைய கற்பித்தல் மாணவர்களின் முன்னேற்றத்தை நோக்கி தொய்வின்றி தொடரும். -சிவகாமி, பட்டதாரி ஆசிரியர்.
நான் மாற்றுத் திறனாளி ஆசிரியராக இருந்தாலும் இப்பள்ளியின் சக ஆசிரியர்களும், மாணவர்களும் தரும் ஒத்துழைப்பினால் ஆங்கில பாடத்தில் 100 சதவீத தேர்ச்சி அளித்து வருகிறேன். திட்டமிட்டு எனது செயல்பாடுகளை நான் அமைத்துக் கொள்வதால் ஆங்கில பாடத்தில் மாணவர்களை சாதிக்க வைக்க முடிகிறது. எனது பாடத்திற்கு தரும் அதே முக்கியத்துவத்தை அனைத்து மாணவர்களும் ஒழுக்கமாக இருப்பதற்கும் அளித்து வருகிறேன். 'முயற்சிப்பவனுக்கு எல்லாம் வெற்றி, முயலாதவனுக்கு என்றுமில்லை வெற்றி' என்பதே மாணவர்களுக்கான எனது அறிவுரை. -பெரியான், பட்டதாரி ஆசிரியர்.
பல்வேறு கல்வித்துறை அலுவலகங்களில் உதவியாளராக பணியாற்றி வந்த நான், கணித ஆசிரியராக பணியாற்றும் லட்சியத்துடன் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றேன். கடந்த கல்வியாண்டில் தான், எடச்சித்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். முதல் ஆண்டிலேயே சக ஆசிரியர்கள் அளித்த உற்சாகத்தினால் எனது கணித பாடத்தில் 100 சதவீத தேர்ச்சி கொடுத்தேன். எனது வகுப்பு மாணவர் சதீஷ் கணித பாடத்தில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் எடுத்தது, எனது கல்விப்பயணத்தில் ஓர் மைல்கல். இனிவரும் ஆண்டு களிலும் எனது சாதனைகள் தொடரும். -கந்தவேல், பட்டதாரி ஆசிரியர்.
@block_B@
துறையூர் வனச்சரகத்தில் வனக்காப்பாளராக பணியாற்றி வந்த நான், ஆசிரியராக வர விரும்பி ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி கடந்த கல்வியாண்டில் தான் இப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். சிறந்த வனக்காப்பாளர் விருதினை வென்ற நான், எனது ஆசிரியர் பணியிலும் சிறந்த ஆசிரியர் விருதை பெறுவேன். இந்தாண்டில் எனது சமூக அறிவியல் பாடத்தில், 100 சதவீத தேர்ச்சியும், மாவட்ட அளவிலான அதிக மதிப்பெண் களையும் மாணவர்களை பெற வைப்பேன். -குமரவேல், பட்டதாரி ஆசிரியர்.block_B
ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி கடந்த கல்வியாண்டில்தான் இப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். என் மீதான நம்பிக்கையில், முதல் ஆண்டிலேயே பத்தாம் வகுப்புக்கு பாடம் கற்பிக்கும் வாய்ப்பை தந்தார்கள். தலைமை ஆசிரியரும், உதவி தலைமை ஆசிரியரும் அவ்வப்போது நல்ல ஆலோசனைகளை வழங்கிய காரணத்தாலும், மாணவர்களின் ஒத்துழைப்பாலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அளித்துள்ளேன். கல்வி இணைச் செயல் பாடுகளிலும் எனக்கு வாய்ப்ப ளித்துள்ளதால் மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும்பணி செய்து வருகிறேன். -உமாமகேஸ்வரி, பட்டதாரி ஆசிரியர்.