மண் நிரம்பி அடையாளத்தை இழக்கும் ராமகுளம் அதிகாரிகள்: அலட்சியத்தால் விவசாயிகள் வேதனை
உடுமலை: மடத்துக்குளம் அருகேயுள்ள ராமகுளத்தை துார்வாரி, கூடுதல் நீர் சேமிக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
அமராவதி அணையிலிருந்து ராமகுளம் கால்வாய் மற்றும் நவ்வால் ஓடை வழியாக, 118 ஏக்கர் பரப்பளவுள்ள ராமகுளத்திற்கு நீர்வரத்து உள்ளது. இக்குளத்தின் வாயிலாக நேரடியாக, 1,388 ஏக்கர் பாசன வசதி பெற்று வருவதோடு, பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களிலுள்ள, விவசாய கிணறு, போர்வெல்களுக்கு நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும், சுற்றுப்புற கிராமங்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
இக்குளம், கால்வாய் பராமரிப்பு மற்றும் பாசன நீர் மேலாண்மை அடிப்படையில், ராமகுளம் பழைய கால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளது.
குளத்தின் ஆவணங்கள் அடிப்படையில், நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு இல்லாததால், ராமகுளத்தை பராமரிப்பதில் பல ஆண்டுகளாக இழுபறி நீடித்து வருகிறது.
துார்வாரப்படாத நிலையில், பல அடி உயரத்திற்கு வண்டல் மண் தேங்கி, நீர் தேங்கும் பரப்பளவு பெருமளவு குறைந்துள்ளது. மேலும், ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, பராமரிப்பு இன்றி, கரைகள் வலுவிழந்து, உடையும் அபாய நிலையில் உள்ளது. குளத்தை துார்வார, பல முறை விவசாயிகள் தரப்பில் மனு அளித்தும், இரு துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை.
அதே போல், ராமகுளம் கால்வாய், 10 கி.மீ.,துாரம் அமைந்துள்ள நிலையில், முழுவதும் மண் கால்வாயாக உள்ளதால், கரை சரிந்தும், புதர் மண்டியும் அடையாளத்தை இழந்துள்ளது.
அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டாலும், நீர் வந்து சேருவதில் சிக்கல் நீடித்து வருகிறது. குடிமராமத்து திட்டம் மற்றும் விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
இக்குளத்தை முறையாக துார்வாரினால், ஒரு டி.எம்.சி., நீர் வரை தேக்கலாம். எனவே, குளத்தை துார்வாரவும், கரையை பலப்படுத்தவும், கால்வாயை புதுப்பிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகள் கூறியதாவது:
அமராவதி ஆற்றின் வாயிலாக, அணை கட்டப்படுவதற்கு முன்பிருந்தே, பல நுாறு ஆண்டுகளாக, ராமகுளம் பாசனம் உள்ளது. ஆவணங்களில் வருவாய்த்துறை வசம் உள்ளதாக நீர் வளத்துறையும், அதிக பரப்பளவு உள்ள குளமாக உள்ளதால் நீர்வளத்துறை வசமே உள்ளது, என வருவாய்த்துறையும் மாறி மாறி கூறுகின்றனர்.
இரு அரசு துறைகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், பல ஆண்டுகளாக குளத்தை துார்வார முடியாமலும், புதர் அகற்றி பராமரிக்க முடியாத நிலை உள்ளது. இதனால், குளத்தின் நீர் தேங்கும் பரப்பளவில் வண்டல் மண் படித்துள்ளது.
அகலமாகவும், ஆழமாகவும் குளம் இருந்த போது, ஆண்டுக்கு மூன்று போகம் சாாகுபடி மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது, மண் மேடாக குளம் மாறியுள்ளதால், ஒரு போகம் சாகுபடி கூட செய்ய முடியாத நிலையில், வறண்டு காணப்படுகிறது.
குடிமராமத்து திட்டம், விளை நிலங்களை வளமாக்கும் வகையில் விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்ளும் திட்டத்தின் கீழ் அனுமதியளிக்க, பல முறை, மாவட்ட கலெக்டர், நீர் வளத்துறை அதிகாரிகளுக்கு, பல ஆண்டுகளாக மனு அளித்தும் பயனில்லை. இரு துறை அதிகாரிகள் அலட்சியம் காரணமாக 'திரிசங்கு' நிலையில், குளத்தை மீட்க முடியாத நிலையில் உள்ளோம்.
அடையாளத்தை இழந்து வரும் ராமகுளத்தை புதுப்பிக்க, மாவட்ட நிர்வாகமும், அரசு துறை அலுவலர்களும் ஆவணங்களை ஆய்வு செய்து, குளத்தை நீர்வளத்துறை மற்றும் தேர்தெடுக்கப்பட்ட ராமகுளம் பழைய வாய்க்கால் நீரினை பயன்படுத்துவோர் சங்கம் வசம் ஒப்படைக்கவும், துார்வாரி கூடுதல் நீர் சேமிக்கும் வகையிலும், கரையை பலப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.
அதே போல், ராமகுளம் குளத்திற்கு நீர் வரும் மண் வாய்க்காலை, கான்கிரீட் கால்வாயாக மாற்றுதல் மற்றும் மடைகள் அமைக்க, 4 ஆண்டுக்கு முன், 8.45 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிதியை ஒதுக்கி, ராமகுளம் கால்வாயை கான்கிரீட் கால்வாயாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
மேலும்
-
போட்டி தேர்வுக்கு தயாராகலாம்
-
டில்லியில் அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு; உரிமையாளர் மீது வழக்கு
-
வருங்கால சந்ததியினர் மீது எனக்கு அதிக நம்பிக்கை; லண்டனில் மோகன் பாகவத் பேச்சு
-
புளோரிடாவில் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்ற சரக்கு விமானம்; 5 பேர் பலி
-
புதிய உச்சத்தை எட்டிய இந்தியா-பிரான்ஸ் உறவுகள்; பாரிஸ் கோவில் திறப்பு விழாவில் மோடி பெருமிதம்
-
தம்பதியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு