டில்லியில் அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு; உரிமையாளர் மீது வழக்கு

1


புதுடில்லி: டில்லியில் 6 அடுக்குகளைக் கொண்ட மாடிக் கட்டடம் சரிந்து விழுந்ததில் இதுவரையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அடுக்குமாடி கட்டட உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தென்மேற்கு டில்லியின் சத்யா நிகேதன் பகுதியில் நேற்று மதியம் 1.30 மணியளவில் 6 அடுக்குமாடி கட்டடம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது. கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால், இந்த கட்டடம் மாணவர்களுக்கான மாதாந்திர கட்டண விடுதியாக செயல்பட்டு வந்துள்ளது. நேற்று விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலான மாணவர்கள் உள்ளே சிக்கியிருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகியது.

குறைந்தபட்சம் 50 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்துடன், மீட்பு குழு மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரையில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். 5 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருவதால், பலி எண்ணிக்கை கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கட்டடம் இடிந்து விழுந்த பகுதியில் மேற்கொள்ளப்படும் மீட்பு பணிகளை டில்லி முதல்வர் ரேகா குப்தா நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் ஆகியோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சுமார் 40 முதல் 50 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டடத்தின் கீழ் தளத்தில் பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. இது தொடர்பாக கட்டடத்தின் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேவேளையில், கட்டடம் சரிந்து விழுந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement