சாமானியர்கள் ஆட்சிக்கு வந்து விட்டார்கள் என்பதை பொறுத்து கொள்ள முடியவில்லை: அமைச்சர் கீர்த்தனா பேச்சு
சிவகாசி:சாமானியர்கள் ஆட்சிக்கு வந்து விட்டார்கள் என்பதை எதிர்க்கட்சியினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என அமைச்சர் கீர்த்தனா பேசினார்.
சிவகாசியில் அமைச்சர் கீர்த்தனா மக்களிடம் நன்றி தெரிவித்து பேசியதாவது,
பணம் இருந்தால் தான் சட்டசபைக்கு செல்ல முடியும் என்ற நிலை இருந்தது. இன்றைக்கு குறுநில மன்னர்களை எல்லாம் தாண்டி சாமானியர்கள் அத்தனை பேரும் சட்டசபையில் அமர்ந்திருக்கிறோம் என்றால் அது முதல்வர் விஜயால் மட்டும்தான். வெளிப்படையான அரசை நடத்திக் கொண்டிருக்கிறோம். யார் தவறு செய்தாலும் வெளியே தெரிய வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக சட்டசபை நிகழ்வினை நேரலையாக பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஊழலற்ற ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
அரசு அலுவலகங்கள் எங்கேயாவது ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கினால் மக்கள் தைரியமாக நாங்கள் கொடுத்துள்ள நம்பருக்கு போன் செய்யுங்கள். கண்டிப்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்போம். சிவகாசியில் 100 முதல் 200 கோடி ரூபாயில் பைரோ பார்க் அமைக்கப்பட உள்ளது. கூடுதலாக ஒரு தீயணைப்பு நிலையமும் அமைக்கப்பட உள்ளது .
சட்டசபை தேர்தலை போன்று உள்ளாட்சித் தேர்தலிலும் எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் தான் அடிப்படை வசதிகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும். சாமானியர்கள் ஆட்சிக்கு வந்து விட்டார்கள் என்பதை எதிர்க்கட்சியினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
ஒவ்வொரு நாளும் எப்படி எங்களை கீழே இறக்கலாம், எப்படி அவதுாறு பரப்பலாம், என்பது மட்டும்தான் அவர்களது குறிக்கோளாக இருக்கிறது. என்னைப் பற்றி அவ்வளவு அவதுாறு பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் ஒரு பெண்மணியாக தைரியமாக சட்டசபைக்கு சென்று உங்கள் சார்பாக நான் வாதாடி வருகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.