ஒடிசாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்தவர்கள் கைது

மீஞ்சூர்:ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த இருவரை, மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்படி, செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், நேற்று சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோழவரம் டோல்கேட் பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள், ஒடிசா மாநிலம், மல்கான்கிரி மாவட்டம், நிலகம்பாரி பகுதியை சேர்ந்த கிஷோர் பேபரி, 25, பீகார் மாநிலம், அவுரங்காபாத் மாவட்டம், சோன்பரசா பகுதியை சேர்ந்த சந்தன்குமார், 30, என்பது தெரிந்தது.

அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது, அவற்றில், 11 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அவற்றை ஒடிசா மாநிலத்தில் இருந்து கடத்தி வந்து, திருப்பூர் மாவட்டத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததும், போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

அதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement