இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது எங்களுக்கு உதவுவதற்கு அல்ல: ரஷ்ய தூதர் விளக்கம்
புதுடில்லி: 'இந்தியா தன் சொந்த எரிசக்தி தேவைக்காகவே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது; உக்ரைன் போருக்கு நிதியளிக்க ரஷ்யாவுக்கு உதவும் நோக்கில் எண்ணெய் வாங்கவில்லை' என, இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ரஷ்யா இடையிலான வர்த்தகத்தில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவது அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் விமர்சனத்தை பெற்றுள்ளது.
ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பது குறித்தும் அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் நேற்று கூறியதாவது:
ரஷ்யாவுக்கு உதவ வேண்டும் என்பதற்காக இந்தியா எங்களிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கவில்லை. தங்கள் சொந்த தேவைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனை கருத்தில் கொண்டுமே எண்ணெய் வாங்குகிறது.
ரஷ்யா மீது பொருளாதார தடைகள் மற்றும் வரி விதிப்பவர்கள், நேர்மையான ஒத்துழைப்புக்கு பதிலாக நெருக்கடி கொடுக்கும் அணுகுமுறையை கையில் எடுத்துள்ளனர். ரஷ்யாவை விட சிறந்த விலையில் இந்தியாவுக்கு எண்ணெய் வழங்க அந்த நாடுகளை யார் தடுக்கின்றனர். ஆனால், அதை யாராலும் செய்ய முடியவில்லை. அதனால் தான் நெருக்கடியும், தண்டனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த விவகாரத்தில் தங்கள் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை பாதுகாக்கும் வகையில், உறுதியாக செயல்பட முடியும் என்பதை இந்தியா ஏற்கனவே காட்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.