வடகிழக்கு பருவமழையை விவசாயிகள் எதிர்பார்ப்பு: நெல் நடவு பணியை துவங்காமல் காத்திருப்பு
திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் வடகிழக்கு பருவமழை கை கொடுக்குமா என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
வைகை ஆறு பாயும் திருப்புவனம் வட்டாரத்தில் மழையை நம்பி காரீப் பருவ சாகுபடி சுமார் நான்காயிரம் ஏக்கரில் நடைபெறுகிறது.
வைகை ஆற்றை ஒட்டியுள்ள பகுதி என்பதால் ஆழ்துளை மற்றும் திறந்த வெளி கிணறுகள் வைத்துள்ள விவசாயிகள் முன்கூட்டியே நெல் நடவு பணிகளை தொடங்குவார்கள், ஆகஸ்ட் மாதத்தில் நாற்றங்கால் தயார் செய்வது, வரப்புகளை வெட்டுவது போன்ற விவசாய பணிகளில் ஈடுபடுவார்கள், கிணற்று பாசனம் இல்லாத விவசாயிகளும் சக விவசாயிகளிடம் காசு கொடுத்து தண்ணீரை வாங்கி விவசாய பணிகளை தொடங்கு வார்கள்.
அடுத்தடுத்து பெய்யும் மழை, வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் கண்மாய்கள் நிரம்பி விவசாயம் முழுமை பெறும், கடந்த சில வருடங்களாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெய்யும் தென்மேற்கு பருவமழை முழுமையாக பெய்யவே இல்லை.
இந்தாண்டு வெயிலின் தாக்கம் இன்று வரை அதிகரித்துள்ள நிலையில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றி விட்டது.
மோட்டார் பம்ப்செட் வைத்துள்ள விவசாயிகளும் வெயிலின் தாக்கத்தால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்ய உள்ள வடகிழக்கு பருவமழை முழுமையாக பெய்யுமா என தெரியவில்லை. வானிலை ஆய்வு மையமும் வடகிழக்கு பருவமழை தொடங்குவது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவே இல்லை.
இந்தாண்டு 'எல் நினோ' தாக்கம் காரணமாக கடும் வெப்பம் உருவாகியுள்ளதாகவும் வடகிழக்கு பருவமழை பெய்தாலும் கடலோர மாவட்டங்களிலேயே அதிகளவு பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது.
இதனால் உள்மாவட்டங்களில் விவசாய பணிகளை தொடங்க விவசாயிகள் யோசனையில் உள்ளனர். திருப்புவனம் வட்டாரத்தில் லாடனேந்தல், திருப்பாச்சேத்தி, மழவராயனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் கிணறுகளில் தண்ணீர் இருந்தாலும் மழை பெய்தால் மட்டுமே நெற்பயிர்களுக்கு சத்து கிடைத்து விளைச்சல் இருக்கும் என்பதால் விவசாயிகள் நெல் நடவு பணிகளை தொடங்கவே இல்லை.
மாரநாடு, கச்சநத்தம், பழையனூர், ஆனைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கிணறுகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் எந்த வித பணிகளையும் தொடங்கவில்லை. மாரநாடு கண்மாயிலும் தண்ணீர் இல்லை.
அக்டோபர் மாத இறுதியில்தான் வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கருதுகின்றனர். அதன்பின் நாற்றங்கால் தயாரித்து நெல் விவசாயம் செய்வது வீண் என்பதால் நேரடி விதைப்பு செய்ய விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு தேவையான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.