தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டில்லியில் இருந்து குஜராத்திற்கு மாற்றம்

புதுடில்லி: 72 ஆண்டுகால வரலாற்றில், டில்லியில் நடந்து வந்த தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா, இந்தாண்டு குஜராத்தின் கெவாடியாவிற்கு மாற்றப்பட்டு உள்ளது.


1954 ம் ஆண்டு முதல், தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்படும் படங்களில் சிறந்த படம், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் டில்லியில் நடக்கும் விழாவில் ஜனாதிபதி விருதுகளை வழங்குவார்.


இந்தாண்டுக்கான தேசியத் திரைப்பட விருது பெறுவோரின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. தனுஷ், அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் விருதுகளை பெற உள்ளனர். தமிழ் சினிமா உலகம் 10 தேசியத் திரைப்பட விருதுகளை பெற்றுள்ளது.


இந்த விருது வழங்கும் விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. கடந்த 72 ஆண்டுகளாக டில்லியில் நடந்து வந்த இந்த விழா, இந்த ஆண்டு, முதன்முறையாக குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் அமைந்துள்ள கெவாடியாவில் (தற்போது ஏக்தா நகர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)நடைபெற உள்ளது. இங்கு உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமைச் சிலை அமைந்துள்ளது. தேசிய திரைப்பட விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்க உள்ளார்.

Advertisement