வழக்கில் சேர்க்காமல் இருக்க பேரம்: அதிகாரிகளுக்கு 'டோஸ்' விட்ட எஸ்.பி.,

மாவட்டத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ள நகரில் கடந்த 27 ம் தேதி இரவு, ஒரே பைக்கில் வந்த 3 இளைஞர்கள், பல்கர் லாரியில் சிக்கி இறந்தனர். இதுகுறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். அந்த லாரி டிரைவரை ஜாமினில் விடுவித்தனர்.

விபத்து குறித்து நடத்திய தொடர் விசாரணையில், விபத்து ஏற்படுத்திய லாரிக்கு முன்னால் சென்ற மற்றொரு பல்கர் லாரியை, பைக்கில் சென்ற இளைஞர்கள் முந்தி செல்ல முயன்றபோது, பைக் ேஹண்ட்பாரில், லாரி உரசியதில் பைக் நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில், மூவரும் பின்னால் வந்த மற்றொரு பல்கர் லாரி சக்கரத்தில் சிக்கி இறந்தது தெரிய வந்தது.

அதன்பேரில், விபத்திற்கு காரணமாக மற்றொரு பல்கர் லாரியையும் கண்டுபிடித்து கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர். இந்த லாரியை, விபத்து வழக்கில் சேர்க்காமல் இருக்க, லாரி டிரைவரிடம் நிலைய மற்றும் கோட்ட அதிகாரிகள் பேரம் பேசியுள்ளனர்.

இதனை அறிந்த மாவட்ட அதிகாரி, இருவரையும் போனில் தொடர்பு கொண்டு 'டோஸ்' விட்டுள்ளார். இதனால், இருவரும் கதிகலங்கி போயுள்ளனர். மாவட்ட அதிகாரியின் இந்த அதிரடி நடவடிக்கையால் சக போலீசாரும் பெரும் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

Advertisement