வெள்ளத்தில் சிக்கிய பொருட்களை விற்றால் நடவடிக்கை பாயும்: நேபாள போலீஸ் எச்சரிக்கை
காத்மாண்டு: வெள்ளத்தில் சிக்கிய பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேபாள காவல்துறை எச்சரித்துள்ளது.
நேபாளத்தில் ஆக.26ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளம் கடும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 1400க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்ட சூழலில், மாயமானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. மாயமானவர்களை 13வது நாளாக தேடும் பணிகள் தொடர்கின்றன.
இந் நிலையில், வெள்ளத்தின் போது பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட, தங்கம், வெள்ளி மற்றும் விலை மதிப்புள்ள பொருட்களை யாரேனும் விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேபாள காவல்துறை எச்சரிக்கையை வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து காவல்துறை மேலும் கூறி உள்ளதாவது;
இப்படி கிடைக்கும் பொருட்களை யாரும் தங்கள் வசம் வைத்துக் கொள்ள வேண்டாம், அதிகாரிகளிடம் முறைப்படி தெரிவித்து, அவற்றை ஒப்படைக்க வேண்டும்.
பொருட்களை பயன்படுத்துவது, மறைத்து வைத்துக் கொள்வது கூடாது. அவ்வாறு செய்வது சட்டப்படி குற்றம். சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வழிவகுக்கும்.
இவ்வாறு காவல்துறை கூறி உள்ளது.
முன்னதாக, பெருவெள்ளத்தின் போது, அடித்துச் செல்லப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து, அதில் இருந்தவற்றை திருடியதாக 29 பேர் கைது செய்யப்பட்டனர். நாராயணி ஆற்றில் பெண் உடலில் இருந்து தங்க காதணிகளை திருடியதாக இருவர் சிக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.