மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் இன்ஜின் கோளாறு; சென்னை விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம்

1

சென்னை: 186 பேருடன் புறப்பட்ட மலேசிய விமானம், இன்ஜின் கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதுபற்றிய விவரம் வருமாறு;

எம்ஹெச் 156 என்ற மலேசியா ஏர்லைன்ஸ் விமானம்,கோலாலம்பூரில் இருந்து ஜெட்டாவுக்கு புறப்பட்டது. விமானத்தில் 186 பயணிகளும், விமான சிப்பந்திகளும் இருந்தனர்.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, அதன் இன்ஜின் பகுதியில் கோளாறு இருப்பதை விமானிகள் கண்டுபிடித்தனர். உடனடியாக சென்னை விமான நிலைய வான் வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினர்.

மேலும், அவசர நடவடிக்கையாக சென்னை விமான நிலையத்திலேயே தரையிறங்க அவர்கள் அனுமதி கேட்டனர். உடனடியாக அனுமதியும் கொடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள், பாதுகாப்புக்கு சிஐஎஸ்எப் படை வீரர்கள் என அனைத்தும் தயார்படுத்தப்பட்டது. பின்னர், 186 பயணிகளுடன் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர்.

விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது எப்படி என்பது பற்றிய எந்த தகவல்களும் வெளியாகவில்லை. இதுகுறித்து விமான போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement