பணிச்சுமை முதல் குடும்ப நெருக்கடி வரை..: தீர்வு காண முதல்வருக்கு போலீசார் கோரிக்கை
கோவை: தமிழகத்தை அமைதிப்பூங்காவாக மாற்ற விரும்பும் அரசு, அதை சாத்தியமாக்கும் பணிச்சூழலை போலீசார் மத்தியில் உருவாக்கியிருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. போலீசார் சிலரிடம் இதுபற்றி பேசினோம்.
பெருகும் பிரிவுகளுக்கு ஏற்ப பணியிடம் தேவை
போதைப்பொருள் தடுப்பு, மதுவிலக்கு, சைபர் கிரைம், சிங்கப்பெண் படை, சமூக வலைதள கண்காணிப்பு உள்ளிட்ட சிறப்பு பிரிவுகள் அதிகரித்து வருகின்றன. புதிய பிரிவுகளுக்கு ஏற்ப புதிய பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை.
மாற்று பணிக்கும் அனுப்பும் நிலை உள்ளது. புதிய பிரிவுகளுக்கு தனி மனித வளம், அலுவலகம், வாகனங்கள், தொழில்நுட்ப வசதிகள் உருவாக்கப்பட வேண்டும்.
வார விடுமுறை ஒரு கனவு
ரோந்து, பீட் பணி, வாகன சோதனை, புகார் மனுக்கள், வழக்குப்பதிவு, விசாரணை, கைது, நீதிமன்ற பணி, கைதிகளை அழைத்துச் செல்லுதல், சம்மன், ஆவணப்பணி என காவல் நிலையப் பணிகளே நீள்கின்றன. இதற்கு மேல் போராட்டம், தேர்தல், திருவிழா, வி.ஐ.பி. பாதுகாப்பு, ரவுடிகள் கண்காணிப்பு, போதைப்பொருள் தடுப்பு, சைபர், போக்சோ வழக்குகள் என பொறுப்புகள் அதிகரிக்கின்றன. சொற்ப போலீசாரால் கையாள முடிவதில்லை. ஆட்கள் பற்றாக்குறையால் வாரவிடுமுறை பெரும்பாலும் கிடைப்பதில்லை.
குற்றவாளிகள் அப்டேட்
போலி கணக்குகள், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, ஆன்லைன் முதலீட்டு மோசடி, தரவு திருட்டு என குற்றவாளிகள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர். இதற்கு இணையாக நவீன கணினிகள், மென்பொருட்கள், டிஜிட்டல் தடய ஆய்வு கருவிகள், டேட்டா பகுப்பாய்வு வசதிகள், தொடர் தொழில்நுட்ப பயிற்சி வழங்க வேண்டும்.
குற்றவாளி ஒரு படி முன்னேறினால், போலீஸ் இரண்டு படி முன்னேற வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் இங்கு இரண்டு படி பின்னோக்கியுள்ளனர்.
பணிச்சூழலை கவனிக்கணும்
சட்டம் - ஒழுங்கை காக்கும் போலீசின் வலிமை, புதிய கட்டடங்களிலும் திட்டங்களிலும் மட்டும் இல்லை. அவர்களின் உடல், மனநிலை மற்றும் பணிச்சூழலிலும் உள்ளது.
மன அழுத்தத்தில் இருக்கும் காவலர், பொதுமக்களை அன்பாக அணுக வேண்டும் என எதிர்பார்ப்பதற்கு முன், அவருக்கான பணிச்சூழல் சரியாக இருக்கிறதா என்பதை அரசு கவனிக்க வேண்டும்.
இப்பிரச்னைகளுக்கு தீர்வு கண்டால்தான் காவல்துறையை வலுப்படுத்த முடியும். அமைதிப்பூங்கா கனவு நிறைவேறும்.
தமிழக முதல்வர் கவனிப்பாரா?
@block_P@
குழந்தையின் பள்ளி நிகழ்ச்சி, குடும்ப விழா, உறவினர் இறப்பு, மருத்துவ அவசரம் என முக்கிய தருணங்களுக்கு செல்ல முடிவதில்லை. கணவன்-மனைவி வெவ்வேறு இடங்களில் வேலை பார்ப்பதால் குழந்தைகள் வளர்வதை அருகில் இருந்து பார்க்க முடியாமை, வயதான பெற்றோரை கவனிக்க முடியாமை போன்றவை, மனஅழுத்தத்தை அதிகரிக்கின்றன.
பெண் காவலர்களுக்கு இது இரட்டை சுமை. இடமாறுதல் கலந்தாய்வு நடைமுறை இருந்தாலும், மனு அளித்துவிட்டு நீண்டகாலம் காத்திருக்கும் நிலை உள்ளது. குடும்பச் சூழ்நிலைக்கு முன்னுரிமை அளிக்கும் வெளிப்படையான இடமாறுதல் நடைமுறை தேவை.block_P