தாராபுரம் இடைத்தேர்தல் 20 குழுக்கள் அமைப்பு

தாராபுரம்: தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் நாளை (9ம் தேதி) துவங்குகிறது.





இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களும் தேர்தல் விதிமுறைகளை கடைபிடித்து ஒத்துழைக்க வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் பணப்பட்டுவாடா உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் வகையில், பறக்கும் படை, 9 குழுக்கள், நிலையான கண்காணிப்புக்குழு, 9 மற்றும் வீடியோ கண்காணிப்புக் குழு, 2 என மொத்தம் 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.



இதுதவிர, தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் தேர்தல் விதிமுறைகள் தொடர்பான புகார்களை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. பொது மற்றும் தனியார் இடங்களில் அனுமதியின்றி விளம்பரங்கள் செய்தல், போஸ்டர்கள் ஒட்டுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.



தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்கள் நடத்தவும், வாகனங்களை பயன்படுத்தவும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி பெற வேண்டும். தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உரிமம் பெற்றுள்ள அனைத்து துப்பாக்கி உரிமையாளர்களும் தங்களது துப்பாக்கிகளை உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் ‘சி-–விஜில்’ செயலி மூலம் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.

Advertisement