பல்லடத்தை பசுமையாக்க உண்ணாவிரதம் உ.உ.க., தலைவர் செல்லமுத்து யோசனை

பல்லடம், செப். 8–

பல்லடம் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தை வலியுறுத்தும் இயக்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம், பல்லடம் அருகே காரணம்பேட்டை மகிழ்வனம் தாவரவியல் பூங்காவில் நேற்று நடைபெற்றது.



இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் வேலுசாமி, பழனிசாமி ஆகியோர் வரவேற்றனர். தாவரவியல் ஆராய்ச்சியாளர் மாணிக்கம், தாய்மண் பாதுகாப்பு அறக்கட்டளைத் தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.



உ.உ.க. மாநிலத் தலைவர் செல்லமுத்து பேசியதாவது:



ஓணான் கூட முட்டையிடாத காடுகள், அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தால் இன்று செழிப்படைந்து காணப்படுகின்றன. அதுபோன்ற ஒரு சூழல் பல்லடம் பகுதிக்கும் உருவாக வேண்டும். பல்லடத்தை பசுமையாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் செயல்பட்டு வருவதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். இதற்காக விழிப்புணர்வு நடைபயணம், வாகனப் பேரணி, மகளிர் மட்டுமே பங்கேற்கும் கூட்டம், மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்கும் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்தலாம்.



ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தை நிறைவேற்றிக் கொடுங்கள், என்று குழந்தைகள் கோரிக்கை வைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யலாம். அதேபோல், ஏதாவது ஒரு வகையில் நீர்வளத்துறை அமைச்சரை இங்கு வரவழைத்து கோரிக்கை வைக்கலாம். அல்லது இயக்கம் சார்பில் சென்னை சென்று அமைச்சரை சந்தித்து மனு அளிக்கலாம். இதில் எதுவும் நடக்கவில்லை என்றால், அத்திக்கடவு – அவிநாசி திட்டப் போராட்ட பாணியில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவிக்கலாம். அதில் முதல் ஆளாக நான் நிற்பேன்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement