கார் மோதி சிறுமி பலி தந்தை, தங்கை காயம்  குள்ளஞ்சாவடியில் சோகம்

கடலுார்: குள்ளஞ்சாவடி அருகே சாலையோரம் நின்றவர்கள் மீது கார் மோதியதில் சிறுமி இறந்தார். தந்தை மற்றும் தங்கை படுகாயமடைந்தனர்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த முதனை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார்–உமா தம்பதி. இவர்களது மகள்கள் சனாஸ்ரீ,6; ரியாஸ்ரீ,3; இதில், சனாஸ்ரீ தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் மூன்று நாள் விடுமுறைக்காக, குள்ளஞ்சாவடி அடுத்துள்ள அம்பலாவணன்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு ராஜ்குமார் தனது மனைவி மற்றும் மகள்களுடன் வந்திருந்தார்.

நேற்று காலை அனைவரும் முதனை கிராமத்திற்கு பைக்கில் புறப்பட்டனர். குள்ளஞ்சாவடி– சத்திரம் சாலையில், கட்டியாங்குப்பத்தில் சாலையோரமாக பைக்கை நிறுத்திவிட்டு, அருகில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டனர்.

ராஜ்குமார் மற்றும் இரு சிறுமிகளும் சாப்பிட்டுவிட்டு பைக் அருகே நின்றுக் கொண்டிருந்தனர். உமா, ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியாக வந்த மாருதி ஸ்வீப்ட் கார், ராஜ்குமார், சனாஸ்ரீ, ரியாஸ்ரீ ஆகியோர் மீது மோதியது. இதில், சனாஸ்ரீ தலை நசுங்கியது. ரியாஸ்ரீக்கு முகத்தில் காயமும், ராஜ்குமாருக்கு காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டது. உடன், அருகில் இருந்தவர்கள், மூவரையும் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சனாஸ்ரீயை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். ராஜ்குமார், ரியாஸ்ரீக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement