‘பாங்கு’ சாக்லேட் விற்க முயன்ற வாலிபர் கைது

முத்தியால்பேட்டை: ‘பாங்கு’ சாக்லேட்டுகளை விற்க முயன்ற, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது வாலிபரை, போலீசார் கைது செய்து, 360 சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர்.

ஏழுகிணறு பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக முத்தியால்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் நேற்று மதியம் 1:00 மணியளவில், போர்த்துகீசியம் சர்ச் தெருவில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அங்குள்ள ஒரு வீட்டின் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். இதில், கஞ்சா செடியின் இலைகளில் இருந்து பெறப்படும் சாறு அல்லது பொடியை சாக்லேட்டுடன் சேர்த்து தயாரிக்கப்படும் பாங்கு சாக்லேட்டுகளை, அவர் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து, அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, ஒரு ரூபாய் மதிப்பிலான 360 பாங்கு சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பிடிபட்டவர், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சையம், 30, என்பதும், ஐந்து ஆண்டுகளாக சென்னை ஏழுகிணறு, போர்த்துகீசியம் சர்ச் தெருவில் வாடகை வீட்டில் தங்கி, ‘பேக்’ தைக்கும் கடையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், இந்த சாக்லேட்டை சாப்பிட்டால் அதிக பசி எடுக்கும் என்றும், பீஹார் மாநிலத்தில் இதை பலர் பயன்படுத்துவதாகவும், அங்கு சாதாரணமாக கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, முகமது சையத்தை கைது செய்த போலீசார், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement