தட்டாஞ்சாவடி தொகுதியில் தேர்தல் நன்னடத்தை விதி அமல் மாவட்ட கலெக்டர் உத்தரவு
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியில் இடைத்தேர்தல் தேர்தல் அறவிப்பையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6 தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ந் தேதியும் நடக்கிறது. தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. நேர்மையான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சுவர்விளம்பரம், போஸ்டர்கள், பேனர்கள், கட்-அவுட்டுகள் போன்றவைகளை தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட பொது இடங்களில் வைப்பது என்பது தேர்தல் நன்னடத்தை படியும், புதுச்சேரி திறந்தவெளி சட்டம்-2010ன் படியும் தண்டனைக்குரிய குற்றமாகும். அரசியல் சம்பந்தமான கொடிகள் ஸ்டிக்கர்கள், படங்கள் மற்றும் விளம்பரங்கள் போன்றவைகளை உபயோகப்படுத்துவதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
தொகுதியில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகளை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள், தங்கள் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்து ரசீது பெற வேண்டும். தேர்தல் முடிந்தவுடன் புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை காண்பித்த பின்னரே துப்பாக்கிகள் திரும்ப பெற முடியும்.
இந்த ஆணையானது தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் வங்கிகள் சம்பந்தப்பட்ட பாதுகாப்புக்காக உரிமம் பெற்று ஆயுதங்கள் வைத்திருப்போருக்கு பொருந்தாது. மேலும் இந்திய தேசிய துப்பாக்கி சங்கத்தில் மாநில அல்லது மாவட்ட துப்பாக்கி சுடுதல் சங்கங்கள், விளையாட்டு வீரர்கள் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்குபெற உரிமம் பெற்ற விளையாட்டு தர ஆயுதங்களை எடுத்துச்செல்லவும் விலக்கு அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.