தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலவரம் சீர்குலையவில்லை: முதல்வர் விஜய்
சென்னை: ''தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலவரம் சீர்குலையவில்லை; தனிப்பட்ட குற்றச் சம்பவங்களை வைத்து, எந்த முடிவுக்கும் வரக்கூடாது,'' என, எதிர்க்கட்சிகளின் புகாருக்கு சட்டசபையில் நேற்று முதல்வர் விஜய் பதிலளித்தார்.
சட்டசபையில் நேற்று, காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து, அவர் பேசியதாவது: எந்த அச்சமும் இடையூறும் இன்றி, நேர்மையாகவும், துணிச்சலாகவும் காவல் துறையினர் செயல்படும் சூழலை உருவாக்க முன்னுரிமை அளித்து வருகிறோம்.
அனைவரும் சமம்
முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் என யாராக இருந்தாலும், காவல் துறையின் சட்டப்பூர்வ நடவடிக்கைகளில், தேவையற்ற தலையீடுகள் இருக்கக்கூடாது என்பதை கடுமையாக வலியுறுத்திஉள்ளேன்.
குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது தான், த.வெ.க., அரசின் நிலைப்பாடு. குற்றத்தைப் பார்க்கும் பார்வையில் மாற்றம் வேண்டும்.
ஒரு குற்றம் நடந்து விட்டது என்பதாலேயே, ஒட்டு மொத்த மாநிலத்தின் சட்டம் -- ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று கூறி விட முடியாது. தனிப்பட்ட குற்றச் சம்பவத்திற்கும், மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டம் - ஒழுங்கு நிலைக்கும் வேறுபாடு உள்ளது. ஒரு குற்றம் நடந்த பின், அதற்கான பொறுப்பை அரசு மீது சுமத்தி, மற்றவர்கள் ஒதுங்கி விட முடியாது.
ஏனெனில், அனைத்து குற்றங்களும் கடந்த 100 நாட்களில் தோன்றியது அல்ல. ஒவ்வொரு குற்றத்திற்கு பின்னும், குடும்பப் பிரச்னை, சொத்து தகராறு, முன் விரோதம், பழிவாங்கும் மனநிலை, போதைப் பொருள் தாக்கம் இருக்கலாம்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட சட்டத்தின் மீது பயமில்லாத நிலை, சிலரின் ஆதிக்கத்தில் காவல் துறை, சமூகக் கட்டுப்பாடு குறைதல், ஜாதி அடையாளம், நிலம், அதிகாரம் மீதான போட்டி, கலப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு, உள்ளூர் அதிகாரப்போட்டி, அரசியல், பொருளாதார ஆதிக்கம், சமூக வலைதளங்களின் தாக்கம் போன்றவை, குற்றங்களுக்கு பின்னணியாக இருக்கலாம் .
நவீன இலக்கு
கடந்த ஜூலை 30ல் நடந்த காவல் துறை கண்காணிப்பாளர்கள் மாநாட்டில், 'குற்றவாளிகளை கைது செய்வதோடு, காவல் துறையின் பணி முடிந்து விடக்கூடாது; குற்றம் உருவாகும் சூழலை கண்டறிந்து, அந்த சூழலையே மாற்றி, குற்றம் நடக்கும் முன்பே தடுப்பதே நவீன இலக்காக இருக்க வேண்டும்.
'இதற்காக, ஒவ்வொரு காவல் நிலையமும், தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், மக்களுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும், வார்டிலும், தெருவிலும் நிலவும் பிரச்னைகளை, காவல் துறையினர் முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சட்டம் - ஒழுங்கு என்பது, தெருவில் நடக்கும் குற்றங்களோடு மட்டும் முடிவதில்லை. நாம், 'டிஜிட்டல்' உலகில் நுழைந்து விட்டோம். அதனால், சைபர் குற்றங்கள் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. இணைய மோசடி, போலி முதலீட்டு திட்டங்கள், வங்கி மோசடிகள், போலி வேலைவாய்ப்பு, சமூக வலைதள மோசடி உள்ளிட்டவை தொழில் நுட்பத்தால் நடக்கின்றன.
வலுவான அமைப்பு
மாணவர்கள் முதல் முதியோர்கள் வரை, அனைவருக்கும் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த அடிப்படை கல்வி வழங்கப்பட வேண்டும். காவல் துறை, வங்கிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பொது மக்கள் இணைந்து செயல்படும் வலுவான சைபர் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
'தகவல் தொழில் நுட்பம் சார்ந்த மக்களுடன் இணைந்த, முன்கூட்டியே குற்றத்தை தடுக்கும், நடுநிலையுடன் செயல்படும் காவல் துறை' என்ற, புதிய பரிணாமத்தை உருவாக்க வேண்டும் என விரும்புகிறேன்.
கோவை, சென்னையில் நடந்த மாணவர்கள் கொலை, குற்றத்தில் ஈடுபட்ட, 35 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சட்டம் தன் கடமையை சமரசமின்றி செய்து வருகிறது. இதற்கு யார் மீது பழி போடலாம் என்று, அரசியல் ரீதியாக சிந்தித்து, எதிர்க்கட்சிகளுக்கு இணையாக, 2021 -- 2026 வரை நடந்த குற்றச் சம்பவங்களை புள்ளிவிவரங்களுடன் கூறிவிட்டு ஒதுங்க, மனம் இடம் தரவில்லை. அதுபோன்ற கீழான அரசியலை நாங்கள் செய்வதில்லை.
போதை கலாசாரம் என்ற ஒற்றை வார்த்தையைக் கூறி, ஒட்டுமொத்த மாணவர் சமுதாயத்தையும் குறை கூறி தப்பித்துக் கொள்வது, ஒரு சிறந்த தலைமைப் பண்பு இல்லை. இதை த.வெ.க., அரசு செய்யாது. மாணவர்களுக்கு சரியான பாதை இதுவரை வகுத்து தரப்படவில்லை. உளவியல் ரீதியாகவும், பொறுப்புடனும் சிந்தித்து, மாணவர் சமுதாயத்தை சரியான பாதைக்கு கொண்டு வர, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
அரசு ஊழியர்கள் நேர்மையாக செயல்பட வேண்டும். ஊழல் தடுப்பு அமைப்புகள் தங்களது சட்டப்பூர்வ கடமையை, எவ்வித தயக்கமும் இன்றி தொடர்ந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில், த.வெ.க., அரசு எவ்வித சமரசமும் செய்யாது.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக எந்த குற்றங்கள் நடந்தாலும், குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க, காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வழக்குகளை விரைந்து விசாரித்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதுடன், நீதிமன்றம் வாயிலாக உரிய தண்டனை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குற்றம் நடந்த பின், நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்ல, குற்றம் நடக்கும் முன்பே தடுப்பதே அரசின் நோக்கம். அதற்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டு, 268 குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளன. காணாமல் போன, 125 பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்; 37,150 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, 21 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன.
காவல் மரணங்கள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல் துறையினர் தவறு செய்தாலும், சட்டம் தனது கடமையைச் செய்து வருகிறது. 21ம் நுாற்றாண்டின் குற்றங்களை, 20ம் நுாற்றாண்டின் காவல் முறைகளால் எதிர்கொள்ள முடியாது. தொழில்நுட்பம் காவல் துறையின் கண்ணாகவும், தடய அறிவியல் அதன் கரமாகவும், மக்கள் பங்கேற்பு இதயமாகவும், சட்டத்தின் சமத்துவம் முதுகெலும்பாகவும் இருக்க வேண்டும். சுதந்திரமான, நவீனமான, மக்கள் சார்ந்த காவல் துறையை உருவாக்குவதே அரசின் லட்சியம்.
காவல் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள், துறை வாரியாகவும், மாவட்ட வாரியாகவும் கணக்கிடப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்படும். காவல் துறையினருக்கு பாதுகாப்பான, மனிதநேயமான, நவீன பணிச் சூழலை உருவாக்க, பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
தீயணைப்பு துறைக்கு நவீன உபகரணங்கள் வேண்டும்; காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் பரிசீலித்து நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
@block_B@
முதல்வர் விஜய் பேசியதாவது: கடந்த ஆட்சியாளர்கள் கவனிப்பாரற்று இருந்ததால், போதைப் பொருள் கலாசாரம் ஆழமாக வேரூன்றி, மரமாக வளர்ந்துள்ளது. போதை என்ற மரத்தின் ஒருசில கிளைகளை வெட்டியிருக்கிறோம். போதை எனும் முழு மரத்தை வேரடி மண்ணோடு அகற்ற வேண்டும். அது, 100 நாட்களில் முடியும் பணியல்ல. அதற்காக 37 மாவட்டங்கள், 9 மாநகரங்களில் 65 தடுப்புப் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
3,263 வழக்குகள் பதியப்பட்டு, 4,350 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,846 கிலோ கஞ்சா, 1 லட்சத்து, 16,159 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகரில், 330 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 546 கைது செய்யப்பட்டு உள்ளனர். 600 கிலோ கஞ்சா, 65,748 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதற்கான விற்பனை, கடத்தல் வலையமைப்புகளை முறியடிப்பதே அரசின் நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.block_B