ஹிந்து என்பது மதமல்ல; கலாசாரத்தின் அடையாளம்: மோகன் பாகவத்

லண்டன்: 'ஹிந்து என்பது வெறும் மதமோ குறிப்பிட்ட புவியியல் எல்லைக்கு உட்பட்டதோ அல்ல. அது கலாசாரத்தின் தனித்துவ அடையாளம்; வாழ்வியல் நெறி,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு விழாவையொட்டி, அதன் தலைவரான மோகன் பாகவத் ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு சென்றுள்ளார்.

தலைநகர் லண்டனில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: 'வேற்றுமையில் ஒற்றுமை' என்பதே ஹிந்து நாகரிகத்தின் அடிப்படை தத்துவம். உலகில் காணப்படும் பன்முகத்தன்மை மிகவும் இயல்பானது.

வெளிப்புற வேறுபாடுகளை கண்டு பிரிந்து விடாமல், பின்னணியில் புதைந்து இருக்கும், 'ஒன்றே உலகம்' என்ற கோட்பாட்டை எப்போதும் மறந்துவிடக் கூடாது.

அனைத்து விதமான நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் ஏற்று, அதனுடன் இணைந்து வாழ்வதே ஹிந்து தர்மத்தின் இயல்பு. ஹிந்து என்பது வெறும் மதம் மட்டுமல்ல; அது கலாசாரத்தின் அடையாளம்.

ஹிந்து சிந்தனை முறை தனி வழிபாட்டு முறையை மட்டும் சரியானதாக கருதுவதில்லை. எனவே, மற்றவர்களை மத மாற்றம் செய்வதற்கான அவசியமும் எழவில்லை.

ஒரே இலக்கை அடைய பல வழிகள் இருக்க முடியும் என்பதை உணர்ந்து, அனைவரும் இணைந்து வாழ்வதே இதன் நோக்கம்.

உலகில் வெறுப்பு மற்றும் எதிர்ப்பு உணர்வுகளுக்கு இடம் அளிக்காமல் இருந்தாலே, மோதல்களுக்கு எளிதில் தீர்வு காண முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement