குஜராத் 'லெட்டர்பேடு' கட்சிகளுக்கு குவிந்த ரூ.1,700 கோடி நிதி

புதுடில்லி: குஜராத்தைச் சேர்ந்த அங்கீகரிக்கப்படாத ஆறு அரசியல் கட்சிகள், 2023 - 24ம் நிதியாண்டில் மட்டும், 1,700 கோடி ரூபாய் நிதி திரட்டி உள்ளன.

இது குறித்து ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை: காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், மார்க். கம்யூ., தேசிய மக்கள் கட்சி ஆகிய ஐந்து தேசியக் கட்சிகள், 2023 - 24 நிதியாண்டில், தேர்தல் நிதியாக, நாடு முழுதும், 1,480 கோடி ரூபாய் திரட்டி உள்ளன.

குஜராத்தைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட ஆனால், அங்கீகரிக்கப்படாத ஆறு அரசியல் கட்சிகள், அதே நிதியாண்டில், 1,700 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டி இருக்கின்றன.

ஐந்து தேசிய கட்சிகள் அந்த நிதியாண்டில் நடந்த லோக்சபா தேர்தலில் திரட்டிய நிதியை வைத்து, 893 வேட்பாளர்களை களமிறக்கின. அதே நேரத்தில், 1,700 கோடி ரூபாய் நிதி திரட்டிய ஆறு குஜராத் கட்சிகள், 15 வேட்பாளர்களையே களத்தில் இறக்கின.

இதில் நான்கு கட்சிகளின் முகவரிகள், ஆமதாபாதின் நரோடா என்ற ஒரே பகுதியில் பதிவாகியுள்ளன. குறிப்பிட்ட இந்த ஆறு கட்சிகளில், 'ஆம் ஜன்மத் கட்சி' மட்டுமே, 620 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டி இருக்கிறது. இது, தேசிய கட்சியான காங்., திரட்டிய நிதியை விட இரு மடங்கு அதிகம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'நாடு முழுதும் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத, 2,800 கட்சிகளில், 73 சதவீத கட்சிகள் தங்களது கணக்கு விபரங்களை தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிப்பதே இல்லை' என, ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தலில் தீவிரமாக போட்டியிடாத இத்தகைய கட்சிகளுக்கு கோடிக்கணக்கில் நிதி குவிவது, வரி ஏய்ப்பு மற்றும் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான சந்தேகங்களை எழுப்புவதாக அது கூறியுள்ளது.

Advertisement