போலீஸ் செய்திகள்

தந்தை இறப்பிற்கு செவிலியர் தான் காரணம் என மகன் புகார்

சிவகாசி: வெம்பக்கோட்டை அருகே மூர்த்தி நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராமர் 60. இவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவரது மகன் ராஜ், செவல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்தார். அங்கு டாக்டர் இல்லாத நிலையில், பணியில் இருந்து செவிலியர் சுப்புலட்சுமி பரிசோதனை செய்து அலைபேசியில் யாரையோ அழைத்து என்ன மருந்து கொடுக்க வேண்டும் என கேட்டு ஊசி போட்டுள்ளார். பத்து நிமிடம் கழித்து ராமருக்கு உடல்நிலை மோசமான நிலையில் மீண்டும் செவிலியர் யாருக்கோ அலைபேசியில் அழைத்து மீண்டும் ஒரு ஊசி போட்டுள்ளார். ராமர் வாந்தி எடுத்த நிலையில், அவரை காரில் ஏற்றிக் கொண்டு உடன் செவிலியரும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக வந்தனர். மருத்துவமனை அருகே உள்ள ரவுண்டானா வந்த நிலையில் பாதை தெரியாமல் பழைய வெள்ளையாபுரம் வழியாக 6 கிலோமீட்டர் சுற்றி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அங்கு ராமரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதற்கு செவிலியரின் அலட்சியமே காரணம் என ராஜ் புகார்படி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

ரூ. ஆறு லட்சம் பட்டாசுகள் பறிமுதல்

சிவகாசி: காமராஜர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் குமார். இவர் வேலாயுத ரஸ்தா ரோடு பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான குடோனில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். போலீசார் அவரை கைது செய்து, 296 பெட்டிகளில் இருந்த ரூ. 6 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.--

மாற்றுத்திறனாளியிடம் ரூ 2.94 லட்சம் மோசடி

சாத்துார்: சாத்துார் முத்தால் நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுப்பையா மகன் மாரிகண்ணன் 39. மாற்றுத்திறனாளி.முக நுால் மூலம் அறிமுகமான அவந்திகா தேவ், தான் பஜாஜ் பிளக் ப்ரோ வில் டிரேடராக இருப்பதாக கூறியுள்ளார்.இதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று அவர் தெரிவித்ததை நம்பி பல கட்டங்களாக மாரி கண்ணன் அவர் அனுப்பிய வங்கி கணக்கிற்கு ரூ.2.94 லட்சம் பணம் அனுப்பியுள்ளார். இதன் பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

198 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது

சாத்துார்: இருக்கன்குடி எஸ்.ஐ., அழகு மாரியப்பன் தலைமையில் போலீசார் சின்ன கொல்லபட்டி விநாயகர் கோயில் அருகில் வந்த 2 டூ வீலர்கள், 2 , சுமோ கார்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அங்கு வந்த மற்றொரு காரில் வந்தவர்கள் சுமோ , டூவீலரில் வந்தவர்களை அழைத்துக்கொண்டு தப்பினர். போலீசார் தொடர்ந்து சோதனை செய்த போது சுமோவில் 198 கிலோ குட்கா இருப்பது தெரிய வந்தது. புகையிலை பாக்கெட்டுகளுடன், 2 டூவீலர்கள் 2 சுமோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடியவர்களில் இருவர் அமீர்பாளையத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் 27, உலகநாதன் 28. என்பது தெரிய வந்தது. உலக நாதனை போலீசார் கைது செய்தனர்.மற்றவர்களை தேடி வருகின்றனர். இருக்கன்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement