தொடர் விடுமுறை தினங்களில் சிறப்பு பஸ் இயக்க கோரிக்கை

திருவாடானை: தொடர் விடுமுறை முடிந்து வெளியூர் செல்பவர்கள் போதிய பஸ்கள் கிடைக்காமல் பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே இனி வரும் தொடர் விடுமுறை நாட்களில் சிறப்பு பஸ்களை இயக்க மக்கள் வலியுறுத்தினர்.

குறிப்பாக கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வார இறுதி நாட்களுடன் சேர்த்து 3 நாட்கள் விடுமுறை நேற்று முன்தினம் (செப்.,6) முடிந்தது.

விடுமுறை முடிவதால் ஏற்கனவே வெளியூர்களிலிருந்து திருவாடானை, தொண்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு வந்தவர்கள் திரும்ப மக்கள் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட வெளியூர்களுக்கு சென்றனர்.

அரசு போக்குவரத்து பஸ்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் வெளியூர்களில் தங்கி படிக்கும் மாணவர்கள் உட்பட பயணிகள் போதிய பஸ் வசதியில்லாமல் சிரமப்பட்டனர்.

மக்களின் நலனை கருத்தில் கொண்டும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், தொடர் விடுமுறை முடியும் நாட்களில் கூடுதல் அரசு பஸ்கள் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement