அரசு மருத்துவமனையில் விடுதி கட்டியும் வீணானது ரூ.1 கோடி மேலுாரில் அவலம்

மேலுார்: மேலுார் அரசு மருத்துவமனையில் நகர்ப்புற வீடற்றோருக்கு கட்டிய விடுதி பயன்பாட்டுக்கு வராததால் நோயாளியுடன் வரும் துணையாளர்கள் (அட்டெண்டர்கள்) திறந்த வெளியில் தங்கும் அவலம் நிலவுகிறது.

இம்மருத்துவமனையில் உள்நோயாளிகளுடன் ஒருவர் மட்டுமே தங்க அனுமதிக்கின்றனர். இதனால் நகராட்சி சார்பில் தேசிய நகர்புற வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தில் ரூ. ஒரு கோடியில் 2023ல் தங்கும் விடுதி கட்டப்பட்டது. ஒரு மேலாளர், 2 கவனிப்பாளர்கள், தலா 1 பாதுகாவலர், துாய்மை பணியாளரை நியமித்து பராமரிக்க சுரபி டிரஸ்டிடம் நகராட்சி நிர்வாகம் 2024 ஏப். 1 முதல் 2027 மார்ச் 31 வரை 3 ஆண்டுகளுக்கு ஒப்படைத்தது. ஆனால் இதுவரை விடுதி பயன்பாட்டுக்கு வராமல் பூட்டி கிடக்கிறது.

துணையாளர்கள் கூறியதாவது: விடுதி ஒப்படைக்கப்பட்ட 3 ஆண்டுகளில் இன்னும் 7 மாதங்களே உள்ளன. இதுவரை விடுதி பயன்பாட்டுக்கு வராமல் பூட்டிக் கிடக்கிறது. அதனால் நோயாளியுடன் வருவோர் மருத்துவமனையில் திறந்தவெளியில் தங்குகின்றனர். ரூ.ஒரு கோடி செலவிட்டு கட்டிய விடுதி பயன்படாமல் மக்களின் பணம் வீணாகிறது. அதை பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படி நகராட்சி அதிகாரிகளிடம் கூறினால் பொறுப்பின்றி தட்டிக் கழிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் விடுதியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.

நகராட்சி கமிஷனர் சண்முகம் கூறுகையில், ''உடனே விசாரித்து விடுதியை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement