விஜய் உத்தரவால அதிகாரிங்க பர்ஸ் காலி! திருதிருன்னு முழிச்சாங்க கல்வி அதிகாரி

ஸ் கூட்டரை சர்வீஸ் சென்டரில் விட சென்ற சித்ராவுடன் வந்து சேர்ந்து கொண்டார் மித்ரா. வழக்கம் போல காத்திருப்பு. சோபாவில் அமர்ந்து அரட்டையை தொடங்கினர்.

''ஜி.எச்.ல அட்மிட் ஆயிருந்த ஒருத்தர் கண்டிஷன் சீரியஸ் ஆயிருச்சு. அவிநாசி ரோட்ல உள்ள பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு மாத்திட்டா நல்லதுனு, அங்க இருந்த யாரோ அட்வைஸ் பண்ணாங்களாம். வாசல்ல நின்ன ஆம்புலன்ஸ்ல ஏத்திட்டு போனாங்க. ஜி.டி.நாயுடு மேம்பாலத்துல போகும்போது, வண்டி நின்னுடுச்சு. டீசல் இல்லையாம். 10 நிமிஷமா அங்கயே நின்னிருக்கு. கூட இருந்த சொந்தக்காரங்க செம டென்ஷன் ஆயிட்டாங்க..”

“அப்புறம்..?” பதட்டமாக கேட்டார் சித்ரா.

“போன் பண்ணி ஒரு வண்டிய வரவழச்சு 'டோ' பண்ணிட்டு போயிருக்காங்க. ஆனா, ஆம்புலன்ஸ் காரங்க பதட்டமே படாம, வாடகைய கரெக்டா வாங்குறதிலயே குறியா இருந்திருக்காங்க..”

“கொங்கு மண்டலத்துக்கு இப்படி ஒரு சோதனையா..” என்று சலித்துக் கொண்டார் சித்ரா. “மாநகராட்சி கதை இருந்தா சொல்லு..”

''வ.உ.சி. பிறந்த நாள் விழா கொண்டாடின கதைய சொல்லட்டுமா? வ.உ.சி.பூங்கால உள்ள அவரோட சிலைக்கு அமைச்சர், கலெக்டர், கார்ப்பரேஷன் கமிஷனர் மாலை அணிவிக்கிறதா ஏற்பாடு. வழக்கமா இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டையும், செலவையும் யாராவது ஒரு அதிகாரி பொறுப்புல விட்ருவாங்க..” என மித்ரா சொல்லும்போது குறுக்கிட்டார் சித்ரா.

“யாராவது இல்ல.. யாரோட வருமானம் அதிகமா இருக்குமோ அவர்கிட்ட விடுவாங்க..”

“அதே. சீனியர்ட்ட பேசும்போது எக்சாக்ட் தகவல் சொல்லணும்னு குட்டு வச்சதுக்கு தேங்ஸ். இந்த தடவ கலெக்டரேட்ல எந்த துறை அதிகாரியும் செலவு செய்ய தயாரா இல்லையாம். 'ஏதோ வருமானம் வந்துட்டு இருந்தப்ப மாலை மைக் எல்லாம் செலவு செஞ்சோம். இப்ப எல்லாத்தையும் நிறுத்த ஆடர் போட்டுட்டு, செலவு பண்ண சொன்னா எங்க போறது?'னு கேட்டாங்களாம்..”

“அடடே, இது சீயெம் கவனத்துக்கு போயாகணுமே..!” என்ற சித்ராவை சந்தேகமாக பார்த்தார் மித்ரா. சீனியர் சீரியசாக சொல்கிறாரா, கிண்டலா என்ற குழப்பம். மேலே சொல்லு என்பது போல சித்ரா கை அசைத்ததும், தொடர்ந்தார்.

''இந்த சங்கடத்தை தவிர்க்க, கார்ப்பரேஷன் மத்திய மண்டல உதவி கமிஷனர், மூனு பேரும் சிலைக்கு போட ஆளுயர மாலை தலா 3,000 குடுத்து வாங்கினாராம். அதோட ஆயிரம் ரூபாய்க்கு உதிரி பூ வாங்கி குடுத்து விழாவை சிறப்பா நடத்திட்டார்...”

''செக்கிழுத்த செம்மல் மேல உண்மையான மரியாதை கொண்டவர் போல..” என சித்ரா சொல்ல, மித்ராவுக்கு மீண்டும் அதே டவுட்.

”வடக்கு மண்டலத்ல லஞ்ச அலை ஓயவில்லைனு சொன்னாங்களே, நெஜம்தானா..?”

''அங்க உள்ள நில அளவை பிரிவுல சீயெம் விஜய் எச்சரிக்கை எடுபடலைனு சொன்னாங்க. அதனால, லஞ்ச ஒழிப்பு துறையோட கண்காணிப்பு தீவிரம் ஆச்சு. போன வாரம் அவங்க வடக்கு மண்டல ஆபீஸ் உள்ள போறதும் வரதுமா இருந்தாங்க. அவங்கள்லாம் பொதுமக்கள் இல்லை, லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள்னு யாரோ கண்டுபிடிச்சுட்டாங்க. மத்தவங்கள அலெர்ட் செஞ்சதும், மொத்த எம்பிளாயிசும் முதல் மாடிக்கு ஏறி, பின்வழியா இறங்கி ஓடிட்டாங்களாம்..”

''வசூல் ஆனத கீழ போட்டுட்டா..?”

சீனியர் ஏதோ முடிவோடு தான் வந்திருக்கிறார் போலும் என தீர்மானித்த மித்ரா, அந்த கேள்விக்கு நேராக பதில் சொல்லாமல் தொடர்ந்தார். “இப்பலாம் அவங்க ரொம்ப உஷாரா வேல செய்றாங்க. எந்த டீலிங்கையும் ஆபீஸ்லயோ, பக்கத்துல உள்ள பேக்கரிலயோ வச்சிக்கிறது இல்லையாம்..”

''ஆனா, கை நீட்றது நிக்கலைனு சொல்ல வர்றியா?”

“எல்லா துறைலயும் எல்லாரும் திருந்திட்டாங்கன்னு சொல்ல முடியாது. பார்ட்டி பண்ட் ஒழிஞ்சதால ஜனங்க மட்டும் இல்ல, அதிகாரிகளும் சந்தோஷப்பட்டாங்க. வாங்கி வாங்கி மேல அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் இல்லைனு நிம்மதி. இருந்தாலும், கட்டட அனுமதி, குடிநீர் இணைப்பு மாதிரியான பைல்கள் இன்னமும் தேங்கிதான் கிடக்குதாம். புரோக்கர்கள் வேலைய முடிச்சு பச்சைக்கொடி காட்ன பிறகுதான் நகருதாம்..”

“நானும் கேள்விப்பட்டேன். ஒரு வருஷம் டைம் குடுத்து, அதுக்கு அப்றமா லஞ்சம் வாங்கினா நடவடிக்கைனு சீயெம் சொல்லிருக்கலாம்னு ஒரு அதிகாரி ரொம்ப ஆதங்கப்பட்டார். அம்பது வருஷ பழக்கத்த திடீர்னு நிறுத்த சொன்னதால, கை கால் நடுங்குதாட்டு இருக்கு..”

''எக்சாக்ட்லிக்கா..” என்று கூறி, அடக்க மாட்டாமல் சிரித்தார் மித்ரா.

“சொல்லிட்டு சிரியேன்..”

“ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு எல்லாம் ஆன்லைன்லயே வாங்கலாம்னு கவர்மென்ட் உத்தரவு போட்டுச்சு இல்லையா, அதனால ஆர்.டி.ஓ. ஆபீஸ்ல தற்காலிக ஊழியர்கள் 32 பேர் டிஸ்மிஸ் ஆயிட்டாங்க. அவங்க பேசிகிட்டத கேட்டேன். நீங்க சொன்ன மாதிரியே பேசினாங்க. அதான் சிரிப்பு தாங்கல..”

“அன்பளிப்பு வாங்றத நிறுத்த அவகாசம் தந்திருக்கலாம்னு பேசினாங்களா..?”

“அதுக்கும் கொஞ்சம் மேல! அதாவது 'விஜய் வந்தா நல்லது நடக்கும், நம்ம வேலைய நிரந்தரம் ஆக்குவார்னு நினைச்சு ஓட்டு போட்டோம்; ஆனா, அவர் திடீர்னு நம்ம பொழப்பையே கெடுத்துட்டாரே..'னு ஒரு லேடி குமுறலா சொன்னாங்க. அதுக்கு இன்னொருத்தர், 'விஜய் நமக்கு நல்லது செய்வார்னு எதிர்பார்த்தோம்; ஆனா அவர் ஜனங்களுக்கு நல்லது செஞ்சுட்டார்..'னு சொன்னார். வேலை போன சோகத்லயும் சிரிச்சுட்டே சொன்னது கொஞ்சம் டச்சிங்கா இருந்துது..”

“ஒருவருக்கு லாபம், இன்னொருத்தருக்கு நஷ்டம். பொருளாதாரம் மட்டுமில்ல, மித்து; வாழ்க்கையே அப்படி மாறியாச்சு!”

அடுத்த டாப்பிக் போனார் மித்ரா. “இது பாரதியார் யுனிவர்சிடி மேட்டர்க்கா. அங்க நிதி, நிர்வாகம் ரெண்டு பிரிவுலயும் சில ஊழியர்கள் ரொம்ப காலமா வேலை செய்றாங்களாம். சிலர் 20 வருஷமா அதே நாற்காலியாம். அவங்க வழியா சிலரோட பில்கள் செம ஸ்பீட்ல சேங்ஷன் ஆறதாவும், சிலரோட பில்ஸ் மட்டும் நிலுவைல வைக்கிறதாவும் சொல்றாங்க..”

“மூணு வருஷத்துக்கு மேல ஒரே இடத்ல இருக்ற அதிகாரிகள டிரான்ஸ்பர் செய்யணும்னு அரசு சமீபத்ல சர்குலர் அனுப்பினது பாரதியாருக்கு வந்து சேரலையோ..?”

“சில பேர மாத்திருக்காங்க. ஆனாலும் நிதி பிரிவு, வி.சி. ஆபீஸ், பதிவாளர் ஆபீஸ்னு சின்ன வட்டத்துக்கு உள்ளயே மாத்துறாங்களாம். அதோட ஆட்கள் வருகை குறைவா இருக்ற சனிக்கிழமை நிதி பிரிவுகாரங்க மட்டும் ஆபீஸ் வந்து வேலை செய்றாங்களாம். இதெல்லாம் சந்தேகத்த கிளப்புறதால, நிதி விஷயமா தீவிரமா விசாரிக்கணும்னு ஊழியர்கள் தரப்புல சொல்றாங்க..”

''கார்ப்பரேஷன்ல கல்லா கட்டுன ரிடையர்டு லேடி ஆபீசரை தேடிப் போன விஜிலென்ஸ் ஆபீசர்ஸ் வெறுங்கையோட திரும்பினாங்களாமே...''

''டி.எம்.கே. ஆட்சில அமைச்சரா இருந்தவரோட தம்பிக்கு, அந்த மேடம் 'பார்ட்டி பண்ட்' வசூலிச்சு குடுத்த டீலிங் சம்பந்தமா விஜிலென்ஸ்க்கு ஆதாரம் கிடைச்சிருக்கு. தொகை கிடைத்ததுன்னு வாட்சப்ல மெசேஜ் அனுப்பிருக்காங்க. எந்த டீலிங்ல தொகை வந்துச்சுன்னு விசாரணை நடக்கும்... அதுக்கு தான் அவங்க வீட்டுக்கு டீம் போயிருக்கு. வீடு பூட்டி கிடந்திருக்கு. ஒரு வாரமா வீட்ல இல்லை; வெளியூர் போயிருக்காங்கன்னு பக்கத்ல சொன்னாங்களாம்..”

''பல ஊர்கள்ல இதே மாதிரி நடக்குது, மித்து. விஜிலென்ஸ் ரெய்டுக்கு முடிவு எடுத்த உடனே, சம்பந்தப்பட்ட ஆளுக்கு தகவல் போயிருது. அதனால இதுவரை பெரிய ஆபீசர்ஸ் யாருமே ரெய்டுல சிக்க மாட்றாங்க. கீழ்நிலை ஆபீசர் சிக்குனாலும் எப்.ஐ.ஆர். போட மாட்றாங்க. போட்டாலும், ஈஸியா ஜாமின்ல வர்ற மாதிரி போடுறாங்க...''

''கோடி கோடியா குடுத்து போஸ்டிங் வாங்கினவங்க ஈசியா சிக்குவாங்களா.. அதோட, எந்த டிபாட்மென்ட்ல யாரு என்ன சொத்து வாங்கிருக்காங்க, எவ்ளோ பேலன்ஸ் வச்சிருக்காங்க..னு எல்லா தகவலும் அவங்க கையில இருக்கும். அத வச்சு, அட்வான்ஸ் இன்பர்மேஷன் கிடைக்கிற மாதிரி ஏற்பாடு செய்றாங்க..”

''கரெக்டா சொன்னப்பா.. ஆனா, ஒவ்வொரு ஆபீஸ்லயும் நல்லவங்க இருக்கத்தான் செய்வாங்க. நாம உண்டு நம்ம வேலை உண்டுனு பொம்மை மாதிரி வந்துட்டு போகாம, எங்கயோ தப்பு நடக்றதா சந்தேகம் வந்தா இப்படித்தான் உடைச்சு பேசணும். நல்லாட்சிங்றது ஒரு தனி மனிதனால வந்துராது, ஜனங்க எல்லாருக்கும் அதுல பொறுப்பு இருக்கு..” என்று சிற்றுரை நிகழ்த்தினார் சித்ரா.

''கண்ணை மூடிட்டு கேட்டா சபாநாயகர் ஸ்பீச் மாதிரியே இருக்கு'' என்ற மித்ரா, சித்ராவின் முறைப்பை கண்டதும், சிரிப்பை நிறுத்தி விட்டு மேட்டருக்கு திரும்பினார்.

“கலெக்டர் ஆபிசில் நடந்த ஆய்வு கூட்டத்ல பள்ளிக்கல்வி அதிகாரிங்க கலந்துகிட்டாங்க. குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்கள் வந்திருந்தாங்க. 'இந்த மாவட்டத்ல எத்தனை பிரைவேட் ஸ்கூல்கள்ல ஹாஸ்டல் இருக்கு?'னு கேட்டாங்க. பதிலே வரல. 'மாவட்ட கல்வி அதிகாரிக்கு தன் அதிகாரத்துல எத்தனை ஹாஸ்டல் இருக்குன்னு கூட தெரியாதா?'னு வறுத்துட்டாங்க.

“ஆய்வுக்கு போனாதானே தெரியும்..?”

“ஆய்வுக்கு போகாம இல்ல. பிரைவேட் ஸ்கூலுக்கு ஆய்வுக்கு போனா, சில ஆவணங்களை எடுத்து தர்றதுக்கே ஸ்கூல் நிர்வாகம் பல மணி நேரம் எடுத்துக்குமாம். இத கேட்டதும், குழந்தை ஆணைய உறுப்பினர் ஒருத்தர், 'மாவட்ட கல்வி அதிகாரி வருகிறார்னு தகவல் வந்தாலே முன்னெல்லாம் பிரைவேட் ஸ்கூல்காரங்க நடுங்குவாங்க. இப்ப எந்த பயமும் இல்ல. இதான் நீங்க ஆய்வு நடத்துற லட்சணமா?'னு கேட்டாங்களாம். இதுக்கும் மவுனம் தான் பதிலாம்.”

“பாலிடிக்ஸ் பேசவே இல்ல, போரடிச்சு போச்சா..?”

“அப்ப இவ்ளோ நேரம் நாம பேசினது ஷேர் மார்க்கெட் சீக்ரட்டா..? சரி, லோக்கல் மேட்டர் ஒண்ணூ சொல்றேன். தி.மு.க.வுல கோவை மாவட்டத்த அஞ்சா பிரிச்சாங்க இல்லையா, அதுல மேட்டுப்பாளையம் தொகுதிக்கு கவிதா கல்யாண சுந்தரம் பேர தலைமை முடிவு செஞ்சிருக்கறதா பேச்சு. இத கேள்வி பட்ட நிர்வாகிங்க, 'சட்டசபை தேர்தல்ல திடீர்னு நிக்க வச்சாங்க.

''எதிர்பாத்த மாதிரியே தோத்துட்டாங்க. சொந்த பூத்ல கூட 3வது இடம். அப்றமா ஆளவே காணோம். இவங்கள மா.செ.வா நியமிச்சா மிச்ச கட்சியும் காலி ஆயிடும். எல்லாம் ராஜினாமா செஞ்சுட்டு வேற வேலைய பாப்போம்னு உ.பி.கள் கொந்தளிக்குறாங்க..”

ஒருவழியாக சர்வீஸ் இன்ஜினியர் வந்தார். “ஸாரி மேடம், ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சுட்டேன்..” என்றதும், செயற்கை புன்னகையுடன் வண்டியில் என்ன பிரச்னை என விளக்க ஆரம்பித்தார் சித்ரா.

Advertisement