கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியடையும்; அதிபர் டிரம்ப் கணிப்பு

4


வாஷிங்டன்: ''ஈரானுடனான மோதலில் அமெரிக்கா வெற்றி பெற்றவுடன் கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக வீழ்ச்சி அடையும்'' என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஈரானுடனான போரில் நாம் வெற்றி பெறும்போது, ​​மற்ற அனைத்தும் வீழ்ச்சியடைவதைப் போலவே, குறிப்பாக அதை விடவும் அதிகமாக கச்சா எண்ணெய் விலைகளும் கடுமையாக வீழ்ச்சியடையும்.

ஒரு கேலன் (3.785 லிட்டர்) மூன்று டாலராக (இந்திய மதிப்பில் ஒரு டாலர் விலை ரூ.94.49) இருக்கும். ஆனால் இறுதியில், இரண்டு டாலருக்கும் கீழே சென்றுவிடும்; இவை அனைத்தும் நிச்சயமாக விரைவாக நடக்கும். ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்காது. அவர்கள் அணு ஆயுதங்களை வைத்திருக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

உலகின் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏறக்குறைய ஐந்தில் ஒரு பங்கு கடந்துசெல்லும் முக்கிய உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகிறது.

கச்சா எண்ணெய் விலைகள் உச்சத்தை எட்டின . பிரென்ட் கச்சா எண்ணெய், ஒரு பீப்பாய்க்கு 97 அமெரிக்க டாலராக உயர்ந்தன. இது கடந்த ஐந்து நாட்களில் 9 சதவீதமும், கடந்த ஒரு மாதத்தில் 19 சதவீதமும் அதிகம் ஆகும். இந்த சூழலில் விலைகள் கடும் வீழ்ச்சியை சந்திக்கும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Advertisement